உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் 20 நாடுகள் சேர்ந்த ஜி20 அமைப்பிற்கு, நடப்பாண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் டெல்லியில் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக வழங்கப்பட்டுள்ள அழைப்பிதழ்தான் தற்போது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.


அந்த அழைப்பிதழில் வழக்கமாக குறிப்பிடப்படும் இந்திய குடியரசு தலைவர்  என்பதற்கு பதில்  பாரத் குடியரசுதலைவர் என  அச்சிடப்பட்டுள்ளது. இது தான் தற்போது பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், அரசியல் சாசனத்தின் ஒன்றாவது பிரிவில் உள்ள  மாநிலங்களின் ஒன்றியம் என்பதற்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.






காங்கிரஸ் எம்பி பிரமோத் திவாரி  இது தொடர்பாக கூறுகையில்,  பாஜகவும், பிரதமர் நரேந்திர மோடியும் இந்தியாவைக் (I.N.D.I.A கூட்டணியை குறிப்பிட்டு) கண்டு பயப்படுகிறார்கள் என்றும், 'மேக் இன் இந்தியா', 'ஸ்கில் இந்தியா' போன்ற பல்வேறு திட்டங்களைக் சுட்டிக்காட்டி அதில் இருக்கும் இந்தியாவின் பெயரை எப்படி மாற்ற முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். 






அதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சந்தா, பாஜக -  இந்தியா என்ற பெயரை எப்படி நீக்க முடியும்? இந்த நாடு ஒரு அரசியல் கட்சிக்கு சொந்தமானது அல்ல; இது 135 கோடி இந்தியர்களுக்கு சொந்தமானது. நமது தேசிய அடையாளம் பாஜகவின் தனிப்பட்ட சொத்து அல்ல என குறிப்பிட்டுள்ளார். 






ஆம் ஆத்மி கட்சியில் செய்தித் தொடர்பாளர் பிரியங்கா கக்கர் இது தொடர்பான டிவிட்டர் பதிவில், இந்தியாவுக்கு எதிராக பேசுபவர்களை அநாகரீகமாக நடத்த வேண்டும். அரசியல் சட்டத்தில் இருந்து 'இந்தியா' நீக்கப்படும் என பா.ஜ.க. நாடாளுமன்ற உறுப்பினர் கௌதம் கம்பீர் கூறுவதை சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளார்.






நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் ஜா, எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டிய ஒரு சில நாட்களிலேயே, பாஜக இந்தியா என்ற சொல்லுக்கு பதிலாக பாரத் என பயன்படுத்துகிறது. அரசியல் சாசனத்தின் ஒன்றாவது பிரிவின்படி இந்தியாவை எங்களிடமிருந்து நீக்கவோ, பிரிக்கவோ முடியாது என தெரிவித்துள்ளார்.  





   இது ஒருபுரம் இருக்க பாஜக கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் தருண் சுங், ” பாரத் என்ற சொல்லை எழுதுவதில் அல்லது பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது? பாரத் என்ற சொல் பல ஆண்டுகளாக புழக்கத்தில் உள்ளது. தேவையில்லாத குழப்பத்தை மக்கள் மத்தியில் உருவாக்கவே இப்படி பேசுகிறார்கள்” என தெரிவித்துள்ளார். 


மேலும் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “எந்த ஒரு விஷயத்தை எடுத்தாலும் அதில் காங்கிரஸ் கட்சிக்கு பிரச்சனை இருக்கும். அவர்களுக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை. நான் ஒரு பாரதவாசி, என் நாடு பாரத நாடு இதனை யாராலும் மாற்ற முடியாது. இதில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதற்கு காங்கிரஸ் கட்சியினர்தான் தீர்வை தேடிக்கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.