மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் வால்நெடுங்கண்ணி உடனாகிய தான்தோன்றீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. முற்கால சோழ மன்னர்களின் ஒருவரும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவருமான கோச்செங்கட் சோழ மன்னனால் அமைக்கப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றிஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். தேவாரப்பாடல் பெற்றதும், அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் பிறந்து வளர்ந்து வாழ்ந்து சிவபெருமானை வழிபட்டு முக்தி அடைந்த தலம் ஆகும்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் 24-ம் ஆண்டு வசந்த நவராத்திரி திருவிழா கடந்த 22-ம் தேதி சிறப்பு ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினந்தோறும் பல்வேறு ஹோமங்கள் மற்றும் சொற்பொழிவுகள் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்றிரவு மிக சிறப்பாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு ஸ்ரீ வால்நெடுங்கண்ணி அம்மன் பச்சை பட்டு உடுத்தியும், ஸ்ரீ தான் தோன்றீஸ்வரர் வென்பட்டு உடுத்தி திரு ஆபரணங்களுடன் வெளிப்பிரகார மண்டபத்தில் எழுந்தருள செய்யப்பட்டனர். முன்னதாக சுவாமியை ஆண்களுடன் சரிசமமாக பெண்களும் சுமந்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். பின்னர் பெண்கள் சீர்வரிசை எடுத்து வந்து சுவாமி அம்பாளின் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
சுவாமி அம்பாளுக்கு பாலால் கால் அலம்பி, பட்டாடையால் துடைத்து, பச்சைபுடி சுற்றி பெண்கள் நலுங்கிட்டனர். தொடர்ந்து புனிதநீர் கடம் வைக்கப்பட்டு ஹோமம் வளர்க்கப்பட்டு சாமி அம்பாளுக்கு மாலை மாற்றும் உற்சவம், கன்னிகாதானம் செய்யப்பட்டது. பின்னர் பட்டாடை சாத்தப்பட்டு திருமாங்கல்ய தாரணம் (திருக்கல்யாணம்) நடைபெற்றது. பின்னர் பூரணாகுதி செய்யப்பட்டு சுவாமி அம்பாளுக்கு புனிதநீர் தெளிக்கப்பட்டு அலங்கார தீபம் உள்ளிட்ட 16 வகையான சோடச தீபாராதனையுடன் மகாதீபாரதனை நடைபெற்றது. பின்னர் பெண்களுக்கு சுமங்கலி பூஜை செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை கண்டு தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
TN CM Stalin : வைக்கம் நூற்றாண்டு விழா...கேரளா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின்..!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்