மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே தேரழுந்தூரில் 108 வைணவ திவ்ய தேசங்களில் பத்தாவது திவ்ய தேசமும், திருமங்கை மன்னரால் 45 பாசுரங்களால் மங்கள சாசனம் செய்யப்பட்டதுமான புகழ்பெற்ற தேரழுந்தூர் ஆமருவியப்பன் திருக்கோயில் அமைந்துள்ளது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் பாவங்களை போக்கிக் கொள்ள தினந்தோறும் புனித நீராடுவதால் பாவச்சுமை கூடிய காவிரி நதி, தனது பாவச் சுமை நீங்க எம்பெருமானிடம் வேண்டி விமோசனம் பெற்றதாக ஐதீகம்.
இதையொட்டி, தேரழுந்தூர் அமருவியப்பன் மல்லியம் ராயர் அக்ரஹாரத்தில் உள்ள காவிரி படித்துறையில் எழுந்தருளி தீர்த்தவாரி கொடுக்கும் ஐதீகத் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் 18-ஆம் நாள், ஆடிப்பெருக்கு அன்று கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் நேற்று, அருவிப்பன் உற்சவமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் எழுந்தருள செய்யப்பட்டு, தொழுதாலங்குடி, அரையபுரம், சேத்திர பாலபுரம் வழியாக மல்லியம் ராயர் அக்ரஹாரம் காவிரி படித்துறையில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோயிலை வந்து அடைந்தது. தொடர்ந்து காவிரி படித்துறையில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்று மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஆடிப்பெருக்கை முன்னிட்டு மயிலாடுதுறை காவிரி ஆற்றின் துலா கட்டத்தில் காவிரி நதியில் பால் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்து தீப ஆராதனை செய்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகரின் நடுவே காவிரி ஆறு பாயும் காவிரி துலாக்கட்டம் மிகவும் புனிதமான இடமாக கருதப்படுகிறது. காவிரி நதி உற்பத்தியாகும் தலைக்காவிரிக்கு அடுத்தபடியாக மயிலாடுதுறையில் தான் காவிரி ஆற்றின் நடுவே மேற்கு நோக்கியபடி நந்திக்கு கோயில் உள்ளது. இங்குள்ள துலாக்கட்டத்தில் காவிரி ஆற்றின் உள்புறம் சரஸ்வதி தீர்த்தம், கங்கை தீர்த்தம் உள்ளிட்ட 16 தீர்த்தக்கட்ட கிணறுகள் அமைந்துள்ளன.
இந்நிலையில் நேற்று ஆடிப்பெருக்கை முன்னிட்டு தஞ்சாவூர் பரம்பரை அமைப்பின் மூலம் காவிரி நதிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மஞ்சள் திரவிய பொடி, பால், தயிர், தேன், சந்தனம் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு காவிரி நதிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, காவிரி ஆரத்தி எனப்படும் மகா தீபாரதனை செய்யப்பட்டு வழிபாடு செய்யப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.