தொடர் கனமழை காரணமாக, உத்தராகண்டின் கௌரிகுண்டில் நேற்று நள்ளிரவு  திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பலர் காயமடைந்தனர் மேலும் பல வீடுகள் மற்றும் கடைகள் இடிந்து விழுந்தது. மாநில பேரிடர் மீட்புப் படையின் (SDRF) குழு தேடுதல் மற்றும் மீட்புப் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

  






உத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு கடைகள் இடிந்து விழுந்ததில் கிட்டத்தட்ட 12 பேர் காணாமல் போயுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ருத்ரபிரயாக் காவல் கண்காணிப்பாளர், விசாகா கூறுகையில், 10-க்கும் மேற்பட்டவர்கள் நிலச்சரிவில் சிக்கி மாயாமாகியுள்ளனர் என்றும், காணாமல் போனவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.  மேலும், மாவட்ட நிர்வாகக் குழு, பேரிடர் மேலாண்மைக் குழு,  காவல்துறையினர், மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட குழுவினர் சம்பவ இடத்திலேயே இருந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், தொடர் மழை காரணமாக கடைகளுக்குள் சிக்கியவர்களை மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் பேரிடர் மேலாண்மை அதிகாரி தலிப் சிங் ராஜ்வர் கூறினார். 


பார்வதி தேவியின் நினைவாக இந்த பகுதிக்கு கௌரிகுண்ட் என்று பெயரிடப்பட்டது. இது ஒரு புனித யாத்திரை தளம் மற்றும் கேதார்நாத் கோயிலுக்கு மலையேற்றத்திற்கான அடிப்படை முகாமாகவும் செயல்படுகிறது. இதற்கிடையில், கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலை, பட்வாடியிலிருந்து 500 மீட்டர் முன்னால், நிலச்சரிவால் ஏற்பட்ட குப்பைகள் சாலையில் விழுந்ததையடுத்து நேற்று காலை முதல் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்படுள்ளது. இதனால் கங்கோத்ரி தாம் யாத்திரை சென்ற பக்தர்களுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. நெடுஞ்சாலையில் போக்குவரத்தை சீர்செய்வதற்காக அந்த பாதை சீரமைக்கப்பட்டது, மேலும் உத்தரகண்ட் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் விழுந்து கிடக்கும் இடிபாடுகள் மற்றும் நிலச்சரிவுகள் காரணமாக பல சாலைகள் மூடப்பட்டுள்ளது.


பத்ரிநாத் தேசிய நெடுஞ்சாலையில் நந்தபிரயாக் மற்றும் சின்கா அருகே நேற்று சாலைகள் மூடப்பட்ட நிலையில் நேற்றைய தினமே மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. வரும் நாட்களில் உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஆகஸ்ட் 8-ஆம் தேதி வரை மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்யும் என்று அறிவித்துள்ளது. அதன்பின்,  படிப்படியாக மழை குறையும் என்றும் தெரிவித்துள்ளது.