மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை தலைமையிடமாகக் கொண்டு ஆசியாவின் முதல் புராட்டஸ்டண்ட் கிறிஸ்தவர்களின் திருச்சபையான தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை அமைந்துள்ளது. இந்த திருச்சபையின் 14 -வது பேராயரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் கடந்த டிசம்பர் மாதம் திருச்சியில் நடைபெற்றது.
காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் தலைமை நீதிபதி பால் வசந்தகுமார் தலைமையில், மதுரை மாவட்ட முன்னாள் நீதிபதி ரத்னராஜ், ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி ஜெயச்சந்திரன் ஆகியோர் கொண்ட மூன்று பேர் குழுவினர் தேர்தலை நடத்தினர். இதனைத் தொடர்ந்து புதிய 14 -வது பேராயராக கிறிஸ்டியன் சாம்ராஜ் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்கும் விழா இன்று மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் அமைந்துள்ள 306 ஆண்டுகள் பழமை வாய்ந்த எருசேலம் ஆலயத்தில் நடைபெற்றது.
இதனை முன்னிட்டு திருச்சபையில் சிறப்பு ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து 13வது பேராயர் டேனியல் ஜெயராஜ் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட 14 -ஆவது பேராயர் கிறிஸ்டியன் சாம்ராஜ் அவர்களுக்கு பட்டாபிஷேகம் செய்து பொறுப்புகளை ஒப்படைத்தார். செங்கோல் மற்றும் மோதிரம் சிலுவை, பேராயருக்கான அங்கி மற்றும் திருமுடி ஆகியவை அணிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிகள் இந்தியா மட்டுமின்றி அமெரிக்கா, ஜெர்மன், லண்டன், உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து திருச்சபையின் சபையார்கள், ஆயர்கள், பேராயர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பேராயர் பதவியேற்றதை முன்னிட்டு வெளிநாடு மற்றும் உள்நாட்டு குழுவினர் சேர்ந்து சிறப்பு பாடல் பாடி மகிழ்ந்தனர். புதிதாக பதவி ஏற்ற பேராயர் செய்தியாளர்களை சந்திக்கும் போது, தொடர்ந்து வாராவாரம் நடைபெறும் ஞாயிற்றுக்கிழமை பூஜைகளில் மத்திய மாநில அரசுகளுக்காக பிரார்த்தனை செய்வதாகவும், நாங்கள் கிறிஸ்தவர்களாக இருந்தாலும் அனைவரும் இந்தியன் என்ற உணர்வுடன் இந்த நாட்டில் ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், சீகன் பால்குவால் தமிழ் முதல் அச்சு இயந்திரத்தை அமைத்து மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு அச்சிடப்பட்ட பைபிள் லண்டன் அருங்காட்சியகத்தில் உள்ளது. அதனை மீட்டு தமிழகத்திற்கு கொண்டுவர அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.