மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறது. தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார்.
சீர்காழியில் சிவபாதகிருதயர், புனிதவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. பக்தர்கள் மனதில் வேண்டுபவற்றை வேண்டிய மாத்திரத்திலேயே அருளும் சட்டை நாதர் கோயிலின் திருப்பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இன்று கோயிலுக்கு வருகை புரிந்த தருமபுரம் ஆதீனம் 27 வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது: சீர்காழியில் அமைந்துள்ள சட்டை நாதர் தேவஸ்தானம் பிரம்மபுரீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் வரும் மே மாதம் 24 -ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு மே மாதம் 20 -ம் தேதி யாகசாலை பூஜைகள் தொடங்கப்பட்டு 22 -ஆம் தேதி பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிஷேகமும் 24 -ஆம் தேதி காலை 9 மணி முதல் 10:30 மணிக்குள் பிரம்மபுரீஸ்வரர் கோயில் மகா கும்பாபிஷேகமும் நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தின் போது 18 ஆயிரம் பக்கம் 16 தொகுப்புகளாக திருமுறையும், 14 சாஸ்திரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட உள்ளது. தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீன கட்டளை சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், மதிமுக மாவட்ட செயலாளர் மார்கோனி உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். முன்னதாக தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ததுடன் கோயில் நந்தவனத்தில் நட்சத்திர நந்தவனத்திற்கான செடிகளை நட்டு வைத்தார்.
பஞ்ச தட்சிணாமூர்த்தி ஸ்தலங்களில் ஒன்றானதும், புகழ்பெற்ற குரு பரிகார ஆலயம் ஆன மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் ஆலயத்தில் தனூர்மாத வழிபாட்டில் தருமபுர ஆதீன மடாதிபதி உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் புகழ்பெற்ற பழமையான வதான்யேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. மயிலாடுதுறையை சுற்றி நான்கு திசைகள் மற்றும் மயிலாடுதுறையை மையமாக வைத்து ஐந்து சிவாலயங்கள் அமைந்துள்ளன. அவற்றில் காவிரி வடகரையில் அமைந்துள்ள வதான்யேஸ்வரர் ஆலயத்தில் வழிகாட்டும் வள்ளலான மேதா தட்சிணாமூர்த்தி ஆலயம் புகழ்வாய்ந்தது. மேதா தக்ஷிணாமூர்த்தி பஞ்ச குரு ஸ்தலங்களில் ஒன்றாக விளங்குகிறார். பல்வேறு சிறப்புகளுடைய இவ்வாலயத்தில் தனூர்மாத சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
இங்கு மார்கழி மாதத்தை முன்னிட்டு மேதா தெட்சிணாமூர்த்தி தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தனூர் மாத வழிபாடு மேற்கொண்டு வரும் தருமபுரம் ஆதீனம் 27 -வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு கோபூஜை, அசுவ பூஜை, ஒட்டக பூஜை செய்து சிறப்பு தரிசனம் செய்தார். கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆதீனகர்த்தருக்கு பூரணகும்ப மரியாதை அளிக்கப்பட்டது.