மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள சேத்திரபாலபுரம் கிராமத்தில் காசிக்கு நிகராக போற்றப்படும் பழமையான காலபைரவர் கோயில் அமைந்துள்ளது. இத்தகைய சிறப்பு மிக்க இந்த கோயிலில் ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை அஷ்டமி தினத்தன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம். இந்த கோயிலில் மிளகு தீபம், பூசணிக்காய் தீபம், பாகற்காய் தீபம், தேங்காய் தீபம் மற்றும் பஞ்சதீபம் எனப்படும் நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், இலுப்பை எண்ணெய் சேர்த்து தீபமிட்டால் நினைத்த காரியம் நடக்கும் என்பது ஐதீகம்.
இந்நிலையில் நேற்று புரட்டாசிமாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சேத்திரபாலபுரம் காலபைரவர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பூசணிக்காய் நெய் விளக்கு தீபங்கள் ஏற்றி வழிபாடு நடத்தினர்.
மயிலாடுதுறையில் உலக பிரசித்தி பெற்ற துலா உற்சவம் இன்று தொடங்குகிறது.
ஐப்பசி மாதத்தின் முதல் நாளை ஒட்டி மயிலாடுதுறையில் பக்தர்கள் துலாக்கட்ட காவிரியில் புனித நீராடி வருகின்றனர். சிவபெருமானிடம் சாபம் பெற்ற பார்வதி தேவியார் சாப விமோசனம் பெற மயில் உருவம் கொண்டு பூஜித்த இடம் மயிலாடுதுறை. அங்கு சிவபெருமானும் மயில் உருகொண்டு இருவரும் ஆனந்த நடனம், மாயூர தாண்டவம் ஆடினர். பின்னர் சிவமயில், தேவி மயிலை நோக்கி பிரம்மா ஸ்தாபித்த இந்த பிர்ம தீர்த்தத்தில் மூழ்கி சிவலிங்கத்தை பூஜிப்பாயாக என்று அசரரீ கூறியது. அதைக் கேட்ட பார்வதி தேவி மன மகிழ்ச்சியுடன் பிரம்ம தீர்த்தத்தில் மூழ்கியெழுந்தாள். மயில் உருநீங்கி தேவியாக சுய உருப்பெற்றாள்.
சிவமயிலும் சிவபிரானாக மாறி என்ன வரம் வேண்டும் தேவி என்றார். அப்போது அம்மை கவுரியாகிய நான் மயில் உருக்கொண்டு பூஜித்ததால் கவுரிமாயூரம் என்ற பெயர் இந்த ஊருக்கு வர வேண்டும். நீங்களும் மாயூரநாதர் என்று அழைக்கப்பட வேண்டும். நான் உங்களை வழிபட்ட இந்த துலா மாதத்தில் இங்கு வந்து நீராடுபவர்களுக்கு அருள்பாலிக்க வேண்டும் என வேண்டினாள் என்பது ஐதீகம். இதனை நினைவுக்கூறும் வகையில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதத்தில் திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான மாயூரநாதர் கோயிலில் அபயாம்பிகை சமேத மாயூரநாதர் சுவாமி காவிரி துலாக்கட்டத்திற்கு எழுந்தருளி தீர்த்த வாரி கொடுக்கும் நிகழ்ச்சி சிறப்பாக நடந்து வருகிறது.
மேலும் இங்கு பக்தர்கள் புனித நீராடியதால் ஏற்பட்ட பாவச்சுமைகளின் காரணமாக கருமை நிறம் அடைந்த கங்கை நதி தனது பாவங்கள் நீங்க சிவபெருமானிடம் பிரார்த்தித்ததாகவும், கங்கையை மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடி பாவங்களை போக்கிக் கொள்ள சிவபெருமான் வரம் அளித்ததாகவும், அதன்படி கங்கை மயிலாடுதுறை காவிரி துலாக் கட்டத்தில் 30 நாட்களும் புனித நீராடி தனது பாவங்களை போக்கிக் கொண்டதாகவும் ஐதீகம்.
இன்று ஐப்பசி மாதம் தொடங்குவதையொட்டி இம்மாதம் முப்பது நாட்களும் மயிலாடுதுறை பகுதியில் உள்ள அனைத்து கோயில்களில் இருந்தும் சுவாமி புறப்பாடு நடைபெற்று. காவிரியில் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம். இதையொட்டி இன்று காலை முதல் ஏராளமான பக்தர்கள் காவிரி துலாக் கட்டத்திற்கு வந்து புனித நீராடி வருகின்றனர். தொடர்ந்து இன்று மதியம் காவிரி துலா கட்டத்தில் தீர்த்தவாரி நடைபெற உள்ளது.