மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் நடைபெறும் காவிரி துலா உற்சவம் மிகவும் புகழ் பெற்றதாகும். ஐப்பசி மாதம் காவிரியில் கங்கை முதலான புண்ணிய நதிகள் நீராடி தங்கள் பாவத்தை போக்கிக்கொண்டதாக புராணம் கூறுகிறது. இதனால் ஐப்பசி மாதம் 30 நாட்களும் காவிரிதுலா உற்சவம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் இந்தாண்டு துலா உற்சவம் பார்வதி தேவி மயில் உருவில் சிவனை பூஜித்து சாபவிமோசனம் அடைந்த மிகவும் பழமைவாய்ந்த 1500 ஆண்டுகள் பழமையான மாயூரநாதர் ஆலயம் மற்றும் வதான்யேஸ்வரர், உள்ளிட்ட பல்வேறு சிவாலயங்களில் கொடியேற்றம் செய்யப்பட்டு 10 நாள் உற்ச்சவம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் பாடல்பெற்ற பழைமை வாய்ந்த மாயூரநாதர் ஆலயத்தில் துலா உற்சவ விழாவின் முக்கிய நிகழ்வாக கடந்த ஏழாம் தேதி திருக்கொடியேற்றம் செய்யப்பட்டு பத்து நாள் உற்சவத்தில் ஏழாம் திருநாளாக நேற்று மாயூரநாதர் அவையாம்பிகை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று நலங்கு உற்சவம் நடைபெற்றது. நலங்கு உற்சவத்தை முன்னிட்டு சாமி அம்பாள் திருமண கோலத்தில் எழுந்தருள செய்யப்பட்டு நலங்கு விளையாட்டு நடைபெற்றது. சுவாமி அம்பாளுக்கு காலில் மருதாணி இடப்பட்டு, வெத்தலை பாக்கு தாம்பூலம் கொடுத்தல், அரிசி கொடுத்து பருப்பு வாங்குதல், பூப்பந்து எரிந்து விளையாடுதல், தேங்காய் உருட்டி விளையாடுதல், தலை சீவி விட்டு அழகு பார்த்து கண்ணாடியில் முகம் பார்த்தல், போன்ற பல்வேறு விளையாட்டுகள் நடைபெற்றது.
இந்த நலங்கு உற்சவத்தின் போது சிறுவர், சிறுமிகள் முதல் பெண்கள் வரை நலங்கு பாடல்களை பக்தி பரவசத்துடன் பாடியது பக்தர்களை பரவசப்படுத்தியது. தொடர்ந்து சோடச தீபாராதனை செய்யப்பட்டு மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் சுவாமி அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. இதில் மயிலாடுதுறையை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்வான கடைமுக தீர்த்தவாரி 16 -ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் அன்றைய தினம் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி அறிவித்துள்ளார்.
Rohit Sharma Record: உலகக்கோப்பையில் 50 சிக்ஸர்கள்! புதிய வரலாறு படைத்த ஹிட் மேன் ரோகித்சர்மா!