மதுரையின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா கடந்த 23-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் திருவிழா வரும் மே 5ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு சிறப்பிப்பது வழக்கம். முன்னதாக மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருத் தேர்திருவிழாவும் நடைபெறும். இந்நிலையில் இன்று தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்று முடிந்தது.


 





 

முன்னதாக கோயிலில் இருந்து சிறப்பு அலங்காரத்தில் புறப்பட்ட சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் ஒரு தேரிலும், அருள்மிகு மீனாட்சிஅம்மன் மற்றொரு தேரிலும் எழுந்தருள நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேரோட்டம்  துவங்கியது.  கீழமாசி வீதி தேரடியில் துவங்கிய இந்த தேரோட்டம் தொடர்ந்து தெற்கு மாசி வீதி , மேலமாசி வீதி , வடக்குமாசி , வழியாக வலம் வந்து நிலையை அடையும் தேர் வலம் வந்த நான்கு மாசி வீதிகளிலும் , பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.



 

மேலும் நகரின் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு இருந்ததுடன் நகர் முழுவதும் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சித்தரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழா வரும் 5-ம் தேதி நடைபெறுவதையொட்டி நகரமே விழா கோலம் பூண்டுள்ளது. இந்நிலையில் கள்ளழகர் திருவிழாவிற்காக அழகர் மலையைவிட்டு நகர் பகுதிக்கு இன்று மாலை கிளம்புகிறார். இதனால் திருவிழா மேலும் சிறப்படைய உள்ளது.