மயிலாடுதுறை அருகே 80 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற ஐதீக திருவிழாவான தன் தவத்தை கலைத்த மன்மதனை சிவன் தன் நெற்றிக்கண்ணால் எரிக்கும் காம தகன நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே கொற்கை என்ற கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற பழமையான வீரட்டேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அஷ்ட வீரட்ட தளங்களில் ஒன்றான இந்த ஆலயம் இறைவன் மீது காமன் கனைகளை தொடுத்த போது அவனை நெற்றிக் கண்களால் எரித்து மீண்டும் உயிர்பித்த ஆலயம் இது வென்று புராண வரலாறுகள் கூறுகின்றன.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த ஆலயத்தின் இங்கு சிவ பெருமான் ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டு மோம நிலைக்கு சென்றதால் உலகம் வெப்பமாகி தகித்தது. இதை உணர்ந்த தேவர்கள், முருகப் பெருமானிடம் முறையிட்டனர். ஆனால் முருகனோ தந்தையின் தவத்தை கலைக்க என்னால் முடியாது, என சொல்ல, மன்மதனிடம் சென்று சிவனின் தவத்தை கலைக்க கோரியதன் பேரில் சிவனின் தவத்தை கலைக்க மன்மதன் சென்றார். சிவனின் மீது தன் மன்மத அம்பை எய்து சிவனின் தவத்தை கலைத்தார் மன்மதன். இதனால் கடும் கோபம் கொண்ட சிவன் தன் தவத்தை கலைத்த மன்மதனை தன் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார்.
இந்த ஐதீக நிகழ்வு மாசி மாதத்தில் சிவன் காமதகனமூர்த்தியாக எழுந்தருளி சம்ஹாரம் செய்யும் ஐதீக திருவிழாவாக இவ்வாலயத்தில் கொண்டாடப்பட்டு வந்தது. ஆனால் பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்ட காம தகன விழா 80 ஆண்டுகளுக்குப்பிறகு கொற்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோயிலில் இருந்து பஞ்சமூர்த்திகளுடன் சிவன் காமதகனமூர்த்தியாக தேரடியில் எழுந்தருளினார். மலர்க்கணை தொடுத்து தவத்தை கலைத்த மன்மதனை சிவன் நெற்றிக்கண்னால் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. பின்னர் மகாதீபாரதனை காண்பிக்கப்பட்டது.
பஞ்சமூர்த்திகள் மன்மதனுடன் காமதகனமூர்தியாக சிவன் திருவீதியுலா காட்சி தந்தார். அப்போது வீடுகள் தோறும் பொதுமக்கள் அர்ச்சனை, தீபாரதனை செய்து வழிபாடு நடத்தினர். இதில் தருமபுரம் திருநாவுக்கரசு தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தாகள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.