மோடியை பிரதமராக ஏற்று, தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும். தேர்தலில் சீட்டு கொடுத்து, அந்த சின்னங்களுக்கு அங்கீகாரம் கொடுக்க பாஜக உழைக்க தயாராக இல்லை என தருமபுரியில் பாஜக கே.பி.ராமலிங்கம் பேட்டியளித்தார்.
தருமபுரி மாவட்ட பாஜக சார்பில் தருமபுரி சட்டமன்றத் தொகுதி மேற்பார்வை கூட்டம் மற்றும் அலுவலகம் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில துணை தலைவர் கே.பி.ராமலிங்கம் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றி வைத்து, அலுவலகத்தை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கே.பி.ராமலிங்கம் பேசியதாவது:
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி பாஜக தேர்தல் பணியை தொடங்கி உள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கு ஆயத்தமாகி வரும் முதல் கட்சி பாஜக. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மக்களுடன் கூட்டணி. மீண்டும் இந்தியா ஐந்தாண்டுகள் வளர்ச்சி பெற மோடி ஆட்சி வேண்டும். மோடியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளும் அரசியல் கட்சியினர் வட சென்னை முதல் கன்னியாகுமரி வரை தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டும். மற்ற கட்சிகளின் சின்னத்தில் நிறுத்தி, போட்டியிட்டு அந்தக் கட்சிகளுக்கு அங்கீகாரம் வாங்கி தரும் இடத்தில் பாஜக இல்லை. அவர்களின் கட்சி சின்னத்திற்கு 8, 6, 4 சீட்டு என கொடுத்து, வெற்றி பெற வைத்துவிட்டு, அடுத்த தேர்தலில் தேசிய சின்னம், மாநில சின்னம் என்ற அங்கீகாரம் வாங்கி கொடுக்க பாஜக உழைக்கவில்லை. வருகின்ற தேர்தலில் பாஜகவகன் பலத்தை, தொண்டர்களின் பலத்தை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்று கூறினார்.
பாஜகவுடன் கூட்டணி வந்தால், தாமரை சின்னத்தில் போட்டியிட வேண்டுமா? என்ற கேள்விக்கு,
எந்த கட்சியாக இருந்தாலும், பேரத்தை முடித்துவிட்டு வரட்டும். அங்க இவ்வளவு கிடைக்குமா? இங்க இவ்வளவு கிடைக்குமா என்று பேரம் பேசிக் கொண்டிருக்கின்றனர். அந்த நேரம் முடிந்து வரட்டும். வேண்டுமென்றால், நாங்கள் யாரோடும் பேரம் பேசவில்லை. நாங்கள் பாஜகவை ஆதரிக்கிறோம் என்று வரட்டும் பேசிக்கலாம், கருத்து தெரிவிக்கிறேன் என தெரிவித்தார்.
மேலும், “மாநில கட்சிகளின் மீது, தேசிய கட்சிகள் குதிரை சவாரி செய்ததாக சொல்கிறார்கள். ஆனால் உண்மை அதுவல்ல. மாநில கட்சிகள் தான், தேசிய கட்சிகள் மீது சவாரி செய்கிறது. காங்கிரஸ் மீது ஏறி, ஏறியே, காங்கிரஸை அழித்து விட்டார்கள். அதனை காங்கிரஸ் விட்டது. ஆனால் இனி பாஜக அதை நடக்க விடாது. வேண்டுமென்றால் வாங்க, இல்லாவிட்டால், போங்க. இனிமேல் தேசிய கட்சிகள் தலைமையில் தான் மாநில கட்சிகள்.
தேர்தலுக்கு பிறகு எப்படி வேண்டுமானாலும் மாறலாம், திமுகவின் இரண்டு பங்கு எம்எல்ஏக்களும், அதிமுகவில் 5-ல் 4 பங்கு எம்எல்ஏக்களும் பாஜகவில் இணையவுள்ளனர். அதனால் ஆட்சியே மாறக்கூடிய சூழ்நிலையும் உண்டு. வருகிற ஏப்ரல் 10-ம் தேதி அதிமுக, திமுகவில் பெரிய பிளவு ஏற்படும் என சொல்கிறேன். டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவது, எதிர்க்கட்சிகளின் தூண்டுதல், மூன்று மாநில தேர்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை பொறுத்துக் கொள்ள முடியாமல், விவசாயிகளை தூண்டிவிட்டு போராட்டம் செய்ய வைக்கின்றனர். விவசாயிகள் போராட்டம் அநீதியானது, கோரிக்கைகள் நியாயமற்றது. விவசாயிகளை உள்ளே எஏன் விட வேண்டும். உள்ளே வந்தால் குண்டு போடுவீர்கள். விவசாயிகள் போராட்டம் எதிர்கட்சிகளும், ஊடகத் துறையினரும் செய்யும் அயோக்கியதனம் என ஊடகத்தின் மீது கே.பி.ராமலிங்கம் பாய்ந்தார்.