ஏபிபி நெட்வொர்க்கின் முதன்மை நிகழ்வான ”ஐடியாஸ் ஆஃப் இந்தியா” உச்சிமாநாட்டின் மூன்றாவது எடிஷன் மும்பையில் இன்று தொடங்கியுள்ளது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாபெரும் நிகழ்வில் சமூகத்தில் முத்திரைப் பதித்த தொழில் அதிபர்கள், கலை, எழுத்துத்துறைகளின் பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகள் என பல்வேறு துறைகளைச் சார்ந்த பிரபலங்கள் பங்கேற்று, பல்வேறு தலைப்புகளின் கீழ் விவாதிக்க உள்ளனர்.


குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய ஏபிபி நெட்வர்க் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரியான அவினாஷ் பாண்டே, “ பெரும் மாற்றங்கள் நிகழ உள்ள ஒரு ஆண்டில் 'ஐடியாஸ் ஆஃப் இந்தியா' நிகழ்வை மீண்டும் கொண்டு வந்துள்ளோம். ஜனநாயகத்தின் மதிப்புகளை நிலைநிறுத்த உலகம் முழுவதும் அறுபது தேர்தல்கள் நடைபெறுகின்றன. ஏபிபி நெட்வொர்க்கின் 'ஐடியாஸ் ஆஃப் இந்தியா' மக்களின் எதிர்பார்ப்புகளில் கவனம் செலுத்துகிறது” என தெரிவித்துள்ளார்.  


இந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக STEM குறித்து விவாதிக்க இஸ்ரோவின் பெண் இயக்குநர்களான நந்தினி ஹரிநாத், ஆதித்யா எல் 1 செயல்திட்ட இயக்குனர் நிகர் சாஜி மற்றும் IIA வின் இயக்குனர் அன்னபூரணி சுப்பிரமணியம் அகியோர் கலந்துக்கொண்டனர். அப்போது பேசிய நிகர் சாஜி,  ”எனது பெற்றோரின் ஆசை நான் மருத்துவர் ஆக வேண்டும் என்பதுதான். ஆனால் நான் அதில் இருந்து சற்று விலகி பொறியியல் படிப்பை தேர்ந்தெடுத்தேன். ஆதித்யா எல் 1 விண்கலம் சூரியனை பற்றி ஆய்வு மேற்கொள்ளவும், சூரியனை பற்றிய புறிதல் மேம்படுத்தவும் முக்கிய பங்காற்றுகிறது.  இஸ்ரோவால் விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக்கோள்களில் தற்போது 50 செயற்கைக்கோள்கள் செயல்பாட்டில் உள்ளது. இவை சூரியனில் இருந்து வரக்கூடிய வெப்பக்காற்று அல்லது சூரிய கதிர்களால் பாதிப்புக்கு உள்ளாகக்கூடும். எனவே ஆதித்யா எல் 1 விண்கலம் அவற்றை பற்றிய புறிதலை மேம்படுத்தும். அதுமட்டுமின்றி ஆதித்யா எல் 1 விண்கலம் தொழில்நுட்பத்திலும் பொருளாதாரத்திலும் இந்தியா ஒரு படி முன்னுக்கு எடுத்து செல்லும்” என குறிப்பிட்டுள்ளார்.


அதேபோல் இந்த விவாதத்தில் கலந்துக்கொண்டு பேசிய அன்னபூரணி, “உங்கள் கனவுகள் அடைவதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். கனவுகளை அடையும் முயற்சியில் நாம் அனைத்திற்கும் வளைந்து கொடுக்க முடியாது. யாராவது உங்கள் மீது ஏதாவது ஒரு விஷயத்தை திணித்தால், நீங்கள் என்ன செய்ய விரும்பவில்லை என்பதை அடையாளம் காண வேண்டும். எல்லாவற்றிற்கும் ஆமாம் என்று சொல்லாமல் இல்லை என்றும் சொல்லி பழக வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.  


STEM பற்றிய விவாதத்தில் பேசிய இஸ்ரோ இயக்குனர் நந்தினி, “ இன்றைய சூழலில் பெண்கள் சுயசார்புடையவர்கள் என்ற நிலை அடைந்துள்ளனர். நாம் எல்லாவற்றிலும் சரியாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை, இங்கு இருக்கும் மக்களின் மனநிலையை மாற்றினாலே போதுமானது தான். விண்வெளி துறையில் இந்தியாவிற்கு பிரகாசமான எதிர்காலம் உண்டு. அதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை” என தெரிவித்துள்ளார்.  


அன்னபூர்ணி சுப்ரமணியம், நந்தினி ஹரிநாத், மற்றும் நிகர் ஷாஜி ஆகியோர், STEMஐ அடிமட்டத்தில் இருந்து பலதரப்பட்ட துறைகளாக மாற்ற வேண்டும். மேலும் பெண்களின் சாதனைகள் கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார்கள். அதேபோல், எந்தவொரு தடைகளையும் சமாளிக்க பெண்களுக்கு அதிக ஆதரவு தேவை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.