மயிலாடுதுறை மாவட்டம் அமைந்துள்ள பல்வேறு அம்மன் கோயில்களில் தீமிமி திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் தீமிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். 


மயிலாடுதுறை காவிரிக்கரை பிரசன்ன சின்னமாரியம்மன் கோயில் தீமிதித் திருவிழா


மயிலாடுதுறை காவிரிக்கரை திம்மநாயக்கன் படித்துறையில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பழைமை வாய்ந்த பிரசன்ன சின்ன மாரியம்மன் திருக்கோயில். இக்கோயிலின் 65-ஆம் ஆண்டு வைகாசி உற்சவம் பூச்சொரிதல் மற்றும் காப்பு கட்டுதலுடன் கடந்த மே 13-ஆம் தேதி தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தது. நேற்று 11-ஆம் நாள் விழாவான தீமிதித் திருவிழாவையொட்டி, காப்புக்கட்டி விரதமிருந்த பக்தர்கள் காவிரிக்கரையில் இருந்து வேப்பிலை ஏந்தியும், உடலில் அலகு குத்தியும் வீதியுலாவாக கோயிலை அடைந்தனர்.  அங்கு கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் பக்தி பரவசத்துடன் இறங்கி தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்தனர். தொடர்ந்து, இரவு அம்பாள் வீதியுலா புறப்பாடு நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர்.




வேம்படி மாரியம்மன் கோயில் தீமிதி திருவிழா 


மயிலாடுதுறை மாவட்டம் வேப்பங்குளம் கிராமத்தில் ஸ்ரீ வேம்படி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் வைகாசி பெருவிழா கடந்த மே 14 -ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆலயத்தில் பூச்சொரித்தல் மற்றும்  சுவாமி வீதிஉலா உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றது‌.  இதனையடுத்து விழாவின் முக்கிய நிகழ்வான 42 -ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்றிரவு வெகு விமர்சியாக நடைபெற்றது. அதில் விரதமிருந்த பக்தர்கள் மேளதாள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். பின்பு ஆலயத்தின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் அலகு காவடி மற்றும் சக்தி கரகம் மற்றும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.




மேல்பாதி ஸ்ரீ செல்லியம்மன் ஆலய தீமிதி உற்சவம் 


மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்கா பொரும்பூர் ஊராட்சியில் மேல்பாதி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ செல்லியம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் தீமிதி உற்சவம் கடந்த 13 -ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து சுவாமி திருவீதியுலா காட்சி உள்ளிட்ட நிகழ்வுகள் நாள்தோறும் தொடர்ச்சியாக நடைபெற்றது‌ . முக்கிய நிகழ்வாக தீமிதி உற்சவம் நேற்றிரவு வெகு விமர்சையாக நடைபெற்றது. 




தீமிதியை  அடுத்து வீரசோழன் ஆற்றங்கரையில் இருந்து விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் மேள வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக ஆலயத்தை வந்தடைந்தனர். அதனை தொடர்ந்து கோயிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி பக்தி பரவசத்துடன் பக்தர்கள் கூண்டு காவடிகள் உடன் தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமிக்கு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பிரம்மாண்டமாக நடைபெற்ற வானவேடிக்கை நிகழ்ச்சியை பக்தர்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


TN School Reopen: தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறப்பு- வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு