தமிழ்நாட்டில் ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து, ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்புகள் வரை ஜூன் 6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


குறிப்பிட்ட ஜூன் 6ஆம் தேதி பள்ளிகளைத் தொடங்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அனைத்துப் பள்ளிகளையும் திறக்கத் தேவையான நடவடிக்கைகளை உடனே எடுக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். 


ஏப்ரல் 6 முதல் கோடை விடுமுறை


தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தில் 2023- 24ஆம் கல்வி ஆண்டைப் பொறுத்தவரை 1 முதல் 3-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஏப்.5-ம் தேதியுடன் பருவத் தேர்வுகள் முடிவடைந்தன. இவர்களுக்கு ஏப்.6-ம் தேதி முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது.


4 முதல் 9ஆம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. மீண்டும் ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் தேர்வு வைக்கப்பட்டு, ஏப்ரல் 24-ல் இருந்து மீண்டும் கோடை விடுமுறை தொடங்கியது.


10, 12ஆம் வகுப்புக்கு எப்போது?


பிளஸ் 2 மாணவர்களுக்கு மார்ச் 23 முதல் கோடை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு ஏப்ரல் 9 முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.


12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் முறையே மே 6ஆம் தேதி மற்றும் மே 10ஆம் தேதி வெளியாகின. இதைத் தொடர்ந்து 2024- 25ஆம் கல்வி ஆண்டில், ஜூன் மாதம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 


மே 22ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம்


கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி குறித்து, தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தலைமையில் மே 22ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் குமர குருபரன், பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, தொடக்கக் கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் மற்றும் பல்வேறு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இதற்குப் பிறகு ஜூன் 6ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.