கடந்த ஜுலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோவில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோவில்களில் கடந்த இரண்டு வாரத்திற்கு மேலாக திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.




அதில் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வேட்டங்குடி கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற புற்றடி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் தீமிதி திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றதாகும்.  அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 26 ஆம் தேதியன்று நடைபெற்ற காப்பு கட்டும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு காப்பு கட்டி கொண்டனர். 




அதனையடுத்து தினந்தோறும் காலை, மாலை ஆகிய இரு வேளைகளிலும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபா ஆராதனை நடைபெற்று, இரவில் அம்மன் வீதியுலா  காட்சியும் நடைபெற்று வந்தது. அதனைத் தொடர்ந்து பத்தாம் நாளான நேற்று நடைபெற்ற தீமிதி திருவிழாவை முன்னிட்டு, காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் மற்றும் தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர், மாலை மாரியம்மன் முக்கிய வீதிகளின் வழியாக பச்சைக்காளி பவளக்காளி ஆட்டத்துடன்  உலா வரும் காட்சி நடைபெற்றது.




தொடர்ந்து காப்பு கட்டிக்கொண்ட விரதம் இருந்த 500- க்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்குள்ள அம்மன் குளத்தில் புனித நீராடி, சக்தி கரகம் முன் செல்ல காவடி, அலகு காவடி எடுத்து வந்து கோயிலின் முன்புறம் இருந்த தீக்குண்டத்தில் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு மாவிளக்கு மற்றும் உருவ பொம்மைகள் வாங்கி வைத்து வேண்டுதலை நிறைவேற்றி வழிபட்டனர். இந்த விழாவில் உள்ளூர், வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்தும் வந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை புதுப்பட்டினம் காவல் ஆய்வாளர் கலைச்செல்வி தலைமையிலான  காவல்துறையினர் செய்திருந்தனர்.


சீர்காழி இரட்டை காளியம்மன் கோயிலில் ஆடி மாத உற்சவம் 300-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம், அலகு காவடி, பறவை காவடி எடுத்து நேர்த்தி கடன் செலுத்தி வழிபாடு!


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் பழைய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற இரட்டை காளியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதம் 10 நாட்கள் உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு ஆடி உற்சவம் கடந்த வெள்ளிக்கிழமை காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு ஆராதனையும், இரவு அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடைபெற்றது. 




விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று தீமிதி திருவிழாவையொட்டி  பக்தர்கள் சட்டை நாதர் சுவாமி கோயிலில் இருந்து பால்குடங்கள், அலகு காவடி, பறவை காவடிகள் எடுத்து முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கோயிலை  சென்றடைந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகா தீபாராதனை  காட்டப்பட்டது. மாலை விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் தீமிதி மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.