தருமபுரம் ஆதீனத்தில் நடைபெற்ற வைகாசி பெருவிழாவின் முக்கிய நிகழ்வான பட்டினப்பிரவேசம் நிகழ்வு பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
தருமபுரம் ஆதீன ஆண்டு பெருவிழா
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தருமபுரத்தில் பழமைவாய்ந்த தருமபுரம் ஆதீனத்தில் ஆண்டுதோறும் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தர் குருபூஜை பெருவிழா, கருத்தங்கம், சமயப்பயிற்சி வகுப்பு, திருநெறிய தெய்வத்தமிழ்மாநாடு, ஞானபுரீஸ்வரர் கோயில் பெருவிழா வைகாசி மாதத்தில் 11 நாட்கள் கொண்டாடப்படும். இதில் 10 -ம் திருநாளில் ஆதிகுருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருமூர்த்தியான கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழாவும், 11 -ம் திருநாள் குருஞானசம்பந்தர் குருபூஜை விழாவில் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியும் நடப்பது வழக்கம்.
பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை
பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சியில் தருமபுரம் ஆதீன கர்த்தரை சிவிகை பல்லக்கில் அமரவைத்து பக்தர்கள் தூக்கிசென்று ஆதீன திருமடத்தின் நான்கு வீதிகளில் சுற்றி வலம் வருவார். அதனைத் தொடர்ந்து ஆதீன கர்த்தர் ஞானகொலுக்காட்சியில் அமர்ந்து அருளாசி வழங்குவது வழக்கம். இந்நிலையில் மனிதனை மனிதன் தூக்கிசெல்லும் பல்லக்கு நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டுமென்று சில அமைப்புகள் கோரிக்கை விடுத்தை அடுத்து கடந்த 2022-ம் ஆண்டு அப்போதைய மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி பட்டினப்பிரவேசம் நிகழ்வுக்கு தடை விதித்தார். அதன்பிறகு பல்வேறு இந்து அமைப்புகள், ஆன்மீக அமைப்புகள் எதிர்ப்புதெரிவித்ததை அடுத்து அரசு அந்த தடையை நீக்கியது.
பிரபலமான பட்டினப்பிரவேசம்
இதனால் பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி பிரபலமானது. அதனைத் தொடர்ந்து கடந்த இரண்டு ஆண்டுகளாக பட்டினப்பிரவேசம் நிகழ்ச்சி கோலாகளமாக நடைபெற்றது. அதேபோல் இந்த ஆண்டு வைகாசி பெருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன்தொடங்கியது. 29-ம் தேதி கமலை ஞானப்பிரகாசர் குருபூஜை விழா நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று குரு ஞானசம்பந்தர் குருபூஜை விழாவையொட்டி தருமை ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் சொக்கநாதர்பூஜை, குருஞானசம்பந்தர் திருவுருவச்சிலைக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளை செய்து வழிபட்டார். மாலையில் ஞானபுரீஸ்வரர், தர்மபுரீஸ்வரர், தூர்க்கை அம்மன் கோயில் மற்றும் மேலகுருமூர்த்தத்தில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார்.
சிவிகை பல்லக்கில் எழுந்தருளிய ஆதீனம்
பின்னர் இரவு 10 மணியளவில் தருமை ஆதீனம் 27 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் திருஆபாரணங்கள் பூண்டு தங்க கொரடு பாதரட்சை அணிந்து திருக்கூட்ட அடியவர்கள் புடைசூழ சிவிகை பல்லக்கில் எழுந்தருளினார். ஆதீன நான்கு வீதிகளிலும் பூர்ணகும்ப மரியாதையுடன் பக்தர்கள் குருமகா சன்னிதானத்திற்கு வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 27 வது குருமகா சந்நிதானம் ஞானகொலுக்காட்சியில் எழுந்தருள திருப்பனந்தாள் ஆதீன இளவரசு ஸ்ரீமத் சபாபதிதம்பிரான் சுவாமிகள் பாவானஅபிஷேகம் செய்துவைத்து மகாதீபாராதனை செய்து வழிபாடு நடத்தினார். தொடர்ந்து குருமகா சந்நிதானம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
பல்வேறு ஆதீனங்கள் பங்கேற்பு
இதில் மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹரஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், செங்கோல் ஆதீனம் 103 வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞானபரமாச்சாரிய சுவாமிகள், சூரியனார்கோயில் ஆதீனம் 28 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், வேளாக்குறிச்சி ஆதீன இளவரசு சுவாமிகள், தருமை ஆதீனம் திருநாவுக்கரசு தம்பிரான், திருஞானசம்பந்ததம்பிரான், மாணிக்கவாசக தம்பிரான் சுவாமிகள் உட்பட தம்பிரான் சுவாமிகள், சைவவேளாளர் சங்க மாநில தலைவர் பண்ணைசொக்கலிங்கம் உட்பட திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.