மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அமைந்துள்ள வைத்தியநாத சுவாமி திருக்கோயில் தமிழ்நாடு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி சாமி தரிசனம் செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோயிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவாரப்பாடல் பெற்ற பழமைவாய்ந்த தையல் நாயகி சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் நவ கிரகங்களில், செவ்வாய் பகவான், செல்வ முத்துக்குமார சுவாமி, சித்த மருத்துவத்தின் மூலவரான தன்வந்திரி சித்தர் ஆகியோர் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர். 




மேலும், இங்கு வரும் பக்தர்களின் நோய்களைப் போக்கும் ஐதீகம் கொண்ட மூலவர் வைத்தியநாத சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு நோய் தீர்த்து வருகிறார். இந்தகோயிலில் அமைந்துள்ள தீர்த்த குளத்தில் நீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டு கோயிலில் வழங்கப்படும் பிரசாதமான திருச்சாந்துருண்டையை உட்கொண்டால் 4448 வகையான வியாதிகள் குணமாகும் என்பது ஐதீகம். மேலும் செவ்வாய் பரிகார ஸ்தலமாகவும் இது விளங்கி வருகிறது. 




இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் நாள்தோறும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து வழிபாடு செய்து வருகின்றனர். மேலும், திரைப்பட பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள் என பலரும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் இன்று காலை வைத்தீஸ்வரன் கோயில் வருகை தந்த எடப்பாடி பழனிச்சாமி வைத்தீஸ்வரன் கோயில் சாமி தரிசனம் செய்தனர்.




மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் முன்னாள் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் சக்தி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சி மற்றும் சிறுபான்மையினர் அதிமுகவில் இணையும் விழாவில் கலந்து கொள்ள தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி இன்று காலை ரயில் மூலம் வைத்தீஸ்வரன் கோயில் வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து வைத்தீஸ்வரன் கோயிலில் உள்ள ஒர் தனியார் விடுதியில் சில மணி நேரம் ஓய்வெடுத்த எடப்பாடி பழனிச்சாமி பின்னர் பிரசித்தி பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார்.




அவருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் கோயில் ஒவ்வொரு சாமி சன்னதிகளிலும் வழிபாடு செய்தனர்.அவருடன் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன், எம்எல்ஏக்கள் புவனகிரி அருண்மொழிதேவன், சிதம்பரம் பாண்டியன், மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் முன்னாள் எம்எல்ஏக்கள் பாரதி ராதாகிருஷ்ணன், முருகமாறன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். முன்னதாக உப்பு மிளகை வைத்து எடப்பாடி பழனிச்சாமி தலையை சுற்றி மாவட்ட செயலாளர் பவுன்ராஜ் ராஜ் பரிகாரம் செய்து வைத்தார். தொடர்ந்து சீர்காழியில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு புறப்பட்டு சென்றார்.