தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் சிறப்பு வாய்ந்ததும், தனித்துவம் வாய்ந்ததும் ஆகும். அந்த வகையில், மார்கழி மாதம் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்தது ஆகும். பெருமாளுக்கு மிகவும் உகந்த மாதமாக கருதப்படும் மார்கழி நாளை பிறக்கிறது.


நாளை பிறக்கும் மார்கழி:


கார்த்திகை மாதம் இன்றுடன் நிறைவு பெறும் நிலையில், மார்கழி மாதம் நாளை பிறக்கிறது. மார்கழி மாதம் பிறப்பை முன்னிட்டு தற்போது முதல் வைணவ தலங்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். புராணங்களின்படி, மனிதர்களுக்கான ஒரு ஆண்டு காலம் என்பது தேவர்களுக்கு ஒரு நாளாக கணக்கிடப்படுகிறது. இதன்படி, தை மாதம் முதல் ஆனி மாதம் வடையில் காலை முதல் பகலாகவும், ஆடி முதல் மார்கழி வரை இரவு முதல் அதிகாலை வரையிலான காலமாகவும் தேவர்களுக்கு இருக்கும் என்று கூறப்படுகிறது. அதிகாலைப் பொழுதாக வரும் மார்கழி மாதம் இதன் காரணமாகவே தனிச்சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது. மேலும், இதன் காரணமாகவே அதிகாலை நேரமான 4 மணி முதல் 6 மணி வரையிலான முகூர்த்த நேரத்தை பிரம்ம முகூர்த்தம் என்று கூறுகின்றனர்.


இத்தனை சிறப்புகளா?


அதிகாலைப் பொழுதின் சிறப்பை குறிக்கும் அம்சமாகவே கருதப்படும் மார்கழி மாதத்தை ஒவ்வொரு ஆண்டும் கோலாகலமாக கொண்டாடுவது வழக்கம்.  தனுர் மாதம் என்று அழைக்கப்படும் இந்த மாதத்தில் கோயில்களில் வழக்கமான வேத மந்திரங்களுக்கு பதிலாக திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடி இறைவனுக்கு பூஜை செய்யப்படும்.


புகழ்பெற்ற திருப்பதி கோயிலிலும் மார்கழி பிறப்பை கோலாகலமாக கொண்டாடுவது ஆண்டுதோறும் வழக்கம். அங்கும் வழக்கமான வேத மந்திரங்களுக்கு பதிலாக மார்கழி மாதத்திற்காக சிறப்பு பாசுரங்கள் பாடப்படுவது வழக்கம். இந்த மாதத்தில் மிருகசீரிட நட்சத்திரத்தில்தான் மார்க்கண்டேயர் பிறந்ததால், இந்த மாதத்தை மரணத்தை வெல்லும் மார்கழி என்றும் புராணங்களில் கூறுகின்றனர்.


வைகுண்ட ஏகாதசி எப்போது?


மார்கழி மாதம் என்றாலே மிக மிக முக்கியமானதாக கருதப்படுவது வைகுண்ட ஏகாதசி. நடப்பாண்டிற்கான வைகுண்ட ஏகாதசி அடுத்தாண்டு ஜனவரி10ம் தேதி பிறக்கிறது. வைகுண்ட ஏகாதசி தினத்தில் கோயில்களில் நடக்கும் சொர்க்கவாசல் பூஜையில் பங்கேற்றால் சொர்க்கத்திற்கு செல்வார்கள் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. வைகுண்ட ஏகாதசிக்கான ஏற்பாடுகளும் கோயில்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மார்கழி மாதத்தில் அனுமன் ஜெயந்தி ( டிச.30), வைகுண்ட ஏகாதசி(ஜன.10), கூடாரவல்லி (ஜன.11), ஆரூத்ரா தரிசனம்(ஜன.13) முக்கியமான பண்டிகைகள் ஆகும்.


மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு தமிழ்நாட்டில் உள்ள புகழ்பெற்ற வைணவ கோயில்களான திருச்சி ஸ்ரீரங்கம் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில், ஆழ்வார்பேட்டை ஆஞ்சநேயர் கோயில், சோளிங்கர் நரசிம்மர் கோயில் களைகட்டி காணப்படுகிறது. இந்த கோயில்களில் நாளை அதிகாலையி முதலே பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவு காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பதியிலும் வழக்கத்தை விட அதிகளவு பக்தர்கள் கூட்டம் காணப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பெருமாள் கோயில்கள்  மட்டுமின்றி சிவன் கோயில்களிலும் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். சிவாலயங்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பக்தர்களின் வசதிக்காக முக்கியமான கோயில்களில் சிறப்பு ஏற்பாடுகளும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் செய்யப்பட்டுள்ளது.