மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஒவ்வொரு பண்பாட்டிலும் ஒவ்வொரு சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகிறது. தமிழர்கள் எப்போதுமே இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து வந்தனர். தமிழர்களின் சடங்குகளும் கொண்டாட்டங்களும் இயற்கை சார்ந்தே இருந்தன. தமிழர்கள் கொண்டாடிய ஒவ்வொரு விழாக்களும், இயற்கைக்கு நன்றி சொல்லும் விதமாகவே கொண்டாடப்படுகிறது. 


சங்க காலத்தில் கார்த்திகை தீபம்


அந்த வகையில் பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் கொண்டாடி வரும் விழாவாக, கார்த்திகை தீப விழா இருந்து வருகிறது.


"மழை கால் நீங்கிய மாக விசும்பில்


குறு முயல் மறு நிறம் கிளர, மதி நிறைந்து,


அறுமீன் சேரும் அகல் இருள் நடு நாள்;


மறுகு விளக்குறுத்து, மாலை தூக்கி,


பழ விறல் மூதூர்ப் பலருடன் துவன்றிய           


விழவு உடன் அயர,வருகதில் அம்ம" என சங்க காலத்தில் கார்த்திகை தீப விழா கொண்டாடப்பட்டதை அகநானூற்று பாடல் தெரிவிக்கிறது. 


மாவளி சுற்றுதல்


இன்றைய காலகட்டத்தில் கார்த்திகை தீபம் பரிமாணம் அடைந்து வேறு வடிவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கார்த்திகை தீபத்திற்கு அடுத்த நாள் நாட்டு கார்த்திகை விழா கொண்டாடப்படுகிறது. நாட்டு கார்த்திகை தீபத் திருவிழா அன்று, மாவளி சுற்றுதல் என்ற சடங்கு பின்பற்றப்பட்டு வருகிறது. 


திருவண்ணாமலை, விழுப்புரம் , மயிலாடுதுறை, வேலூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் இன்றும் மாவளி சுற்றுதல் சடங்கு கடைபிடிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளுக்கு முன்பு பழமையான ஓவியம் ஒன்று, இந்தப் பாரம்பரிய சடங்கிற்கு சாட்சியாக நின்று கொண்டிருக்கிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஐகுந்தம் பாறைஓவியத்தில் மாவளி சுற்றும் காட்சி இந்த சடங்கு எவ்வளவு முக்கியமானது மற்றும் எவ்வளவு ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வருகிறது என்பதை நமக்கு உணர்த்தி விடுவது. 


மாவளி செய்யும் முறை என்ன ? - karthigai deepam mavali


ஆண் பனை மரத்தில் உருவாகும் பூக்கள் கார்த்திகை தீபத்திற்கு சில வாரங்களுக்கு முன்பே சேமித்து வைத்து விடுவார்கள். திருவிழாவிற்கு சில நாட்களுக்கு முன்பு, பனம்பூவைக் குழி பறித்து அதனுள் வைத்து, எரிய வைத்து கருக்கிவிடுவார்கள். இதனைத் தொடர்ந்து அந்த குழியை மூடி விடுவார்கள். சில நாட்கள் கழித்து அதிலிருந்து, பனம்பூ காரியை எடுத்து அதை நன்கு தூளாக்கி காட்டன் துணியில் சுற்றி பொட்டலமாக வைத்துவிடுவார்கள். 


இப்பொட்டலத்தை பனை ஓலை மட்டைகளின் நடுவே வைத்துக் கட்டிவிடுவார்கள். இதனை இரண்டு முதல் மூன்று முழம் உள்ள வலிமையான கயிற்றில் கட்டி, அதன் பிறகு நெருப்புத் கங்கை அந்த பொட்டலத்தின் மீது வைத்து, அதை எடுத்து சுற்ற தொடங்கினால் மாவளி தயார். "மாவளியோ மாவளி"என சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சி ஆரவாரத்துடன் சுற்றி மகிழ்வார்கள். அதிலிருந்து வெளிப்படும் நெருப்பு பொறி இருட்டி பார்ப்பதற்கு ரம்யமாக காட்சியளிக்கும்.