சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோயிலில் மண்டலபிஷேக பூர்த்தி விழா - முத்து சட்டைநாதருக்கு 108 கலசாபிசேகம்

சீர்காழி சட்டைநாதர் கோயில் மண்டலபிஷேகத்தை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் முன்னிலையில் முத்து சட்டைநாதருக்கு 108 கலசாபிசேகம் நடைபெற்றது.

Continues below advertisement

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான புராதண சிறப்பு வாய்ந்த மிகவும் பழமையான திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர்  திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோயில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது. இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோயிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டைநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

Continues below advertisement


சீர்காழியில் சிவபாத இருதயருக்கும் பகவதி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்து கோயிலில் அம்பாளிடம் ஞானப்பால் அருந்தியதால் ஞானம் பெற்று தனது மூன்றாவது வயதில் தோடுடைய செவியன் என்ற தேவாரத்தின் முதல் பதிகத்தை அருளிய திருஞானசம்பந்தருக்கு இக்கோயில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மே மாதம் 24 -ம் தேதி வெகு விமர்சையாக ஹெலிகாப்டர் மூலம் விமான கலசங்களுக்கு மலர் தூவப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்நிலையில் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா கடந்த மூன்று நாளாக நடைபெற்றது. முதல் நாளாக, ஆபத்து காத்த விநாயகர், சம்ஹார வேலர், அஷ்ட பைரவர், குணம் தீர்த்த விநாயகர், கணநாதர், திருஞானசம்பந்தர் சுவாமி உள்ளிட்ட பரிவார தெய்வங்கள் சன்னதிகளுக்கு மண்டலாபிஷேக பூர்த்தி வழிபாடு நடைபெற்றது.


முன்னதாக புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்று, வேத விற்பனர்கள் வேத மந்திரம் முழங்க யாகத்தில் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து தருமபுபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள தாள வாத்தியங்கள் முழங்க கோயிலை வலம் வந்து ஆபத்து காத்த விநாயகர், சம்ஹாரவேலர், அஷ்ட பைரவர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாரதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தொடர்ந்து இரண்டாவது நாளாக பிரம்மபுரீஸ்வர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் நடந்தது.  அதற்காக  புனித நீர் அடங்கிய கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் செய்து தீபாராதனை நடைபெற்றது.    பின்னர்  தருமபுரம் ஆதீனம் 27 ஆவது குரு மகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் மேளதாள வாத்தியங்களுடன் புறப்பட்டு கோயிலை வலம் வந்து, மூலவர் பிரம்மபுரீஸ்வரர் சுவாமிக்கு புனித நீர் கொண்டு அபிஷேகமும், தொடர்ந்து 1008 சங்குகளில் நிரப்பப்பட்டிருந்த புனித நீரால் சங்காபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. அதேபோன்று திருநிலை நாயகி அம்மனுக்கு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதில் சீர்காழி  சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்  .


இந்நிலையில் மண்டலாபிஷேகம் பூர்த்தி விழா நிறைவு நாளான நேற்று முத்து சட்டை நாதருக்கு திரவியப்பொடிகள், தேன், பழங்கள், பால், தயிர், தேன், இளநீர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்து தீபாராதனை நடைபெற்றது. அதனை தொடர்ந்து முத்து சட்டைநாதருக்கு புனித நீர் அடங்கிய 108 கடங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் செய்து தீபாராதனை நடந்தது. தருமபுபுரம் ஆதீனம் 27ஆவது குரு மகா சந்திதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் புனித நீர் அடங்கிய கடங்கள் புறப்பட்டு மேள தாளங்கள் முழங்க கோயிலை வலம் வந்து, முத்து சட்டைநாதருக்கு 108 குடங்களில் நிரப்பப்பட்டிருந்த புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Continues below advertisement
Sponsored Links by Taboola