ஒவ்வொரு மாதமும் வரும் அமாவாசை நாட்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக அமைகிறது. அமாவாசை நாட்களிலே மகாளாய அமாவாசை மிக மிகச் சிறப்பு வாய்ந்த நாள் ஆகும். இந்த மகாளாய அமாவாசை மகாளய பட்ச காலத்தில் செய்யப்படும் நாள் ஆகும்.


மகாளய பட்ச காலம்:


மகாளயம் என்றால் ஒன்று கூடுதல் என்று அர்த்தம். பட்சம் என்றால் 15 நாட்கள் கொண்ட கால அளவு ஆகும். நம் முன்னோர்களை வழிபட்டு, அவர்களின் ஆசிர்வாதத்தை பெறுவதற்கான காலமே மகாளயபட்சம் ஆகும். நம் முன்னோர்கள் அனைவரின் ஆசிர்வாதத்தையும் பெறுவதற்கான 15 நாட்கள் மகாளய படசம் என்று அழைக்கப்படுகிறது.


இந்த காலத்தில் மறைந்த நமது முன்னோர்கள் அனைவரும் பூமிக்கு வந்து 15 நாட்கள் தங்கியிருப்பதாகவும். இந்த காலகட்டத்தில் நாம் அவர்களுக்கு செய்யும் வழிபாடுகள், பிறருக்கு செய்யும் தானங்களை அவர்கள் ஏற்றுக்கொள்வதாக நம்பப்படுகிறது. இதன் மூலம் முன்னோர்கள் ஆசிர்வாதத்துடன் நமது வாழ்க்கை முன்னேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.


மகாளய பட்ச காலம் எப்போது?


ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத பவுர்ணமிக்கு பிறகு வரும் பிரதமை தொடங்கி, அமாவாசை வரையிலான 15 நாட்கள் மகாளய பட்ச காலம் ஆகும். நடப்பாண்டிற்கான மகாளய பட்ச காலம் செப்டம்பர் 18ம் தேதி தொடங்கிவிட்டது. மகாளய பட்சம் வரும் அக்டோபர் 2ம் தேதி வரை வருகிறது.  இந்த காலகட்டத்தில் முன்னோர்களை  வணங்குவதால் பித்ரு தோஷம், பித்ரு சாபம் ஆகியவை நீங்குவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.


மகாளய அமாவாசை எப்போது? | Mahalaya Amavasya 2024 Date and Time


அமாவாசை நாட்களே மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படும் நிலையில், மகாளாய அமாவாசை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. நடப்பாண்டிற்கான மகாளய அமாவாசை வரும் அக்டோபர் 2ம் தேதி வருகிறது.


அமாவாசை திதியானது வரும் அக்டோபர் 1ம் தேதி இரவு 10.35 மணிக்கு தொடங்கி, வரும் அக்டோபர் 3ம் தேதி நள்ளிரவு 12.34 மணி வரை வருகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, ஒரு நாளின் சூரிய உதயத்தின்போது என்ன திதி உள்ளதோ அதுவே கணக்கில் கொள்ளப்படும். இதன்படி, மகாளய அமாவாசை வரும் அக்டோபர் 2ம் தேதி புதன்கிழமை வருகிறது.


தர்ப்பணம் கொடுக்க சிறந்த நேரம் எது?


பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது வழக்கம் ஆகும். மகாளாய அமாவாசை நாட்களில் நீர்நிலைகளில், கடற்கரைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும்.


மகாளய அமாவாசை வரும் அக்டோபர் 2ம் தேதி காலை 7.30 மணி முதல் காலை 9 மணி வரை எமகண்ட நேரம் ஆகும். பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை ராகு காலம் ஆகும். இதனால், எமகண்ட மற்றும் ராகு காலம் தவிர்த்து மற்ற நேரங்களில் தர்ப்பணம் கொடுக்கலாம்.


அக்டோபர் 2ம் தேதி காலை 6.02 மணி சூரிய உதயம் வருகிறது. இதனால், காலை 6.04 மணி முதல் எமகண்டம் பிறப்பதற்கு முந்தைய நேரமான 7.25 வரையிலும், அதேபோல ராகு காலம் பிறப்பதற்கு முந்தைய நேரமான காலை 9.05 மணி முதல் மதியம் 11.55 மணிக்குள் தர்ப்பணம் கொடுப்பது சிறந்தது ஆகும்.


ஒரு தினத்தில் உச்சி பொழுதிற்கு பிறகு தர்ப்பணம் கொடுக்கக்கூடாது என்பதால் இந்த நேரத்தில் செய்வதே சிறந்தது ஆகும்.