கடல் உள்வாங்கியதால் மணல் பரப்பில் காட்சி அளிக்கும் மகிஷாசூரமர்த்தினி குடைவரை கோயில், கற்கள் கொட்டி கடல் அரிப்பில் இருந்து பாதுகாக்க தொல்பொருள்துறைக்கு பொதுமக்கள் கோரிக்கை


 


 


அதிசயம் நிறைந்த மாமல்லபுரம்


சென்னை அருகில் செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அமைந்துள்ளது. கி.பி எட்டாம் நூற்றாண்டில் (700-728) கருங்கற்களைக் கொண்டு கட்டுமானம் செய்யப்பட்ட கோயிலாகும். மாமல்லபுரக் கடற்கரையில் அமைந்துள்ள, கடற்கரைக் கோயில்கள் என அறியப்படுகின்ற கோயில்கள் அனைத்தும் இரண்டாம் நரசிம்மவர்ம பல்லவனால் கட்டபப்பட்டவயே. ஒற்றைக்கல் யானை, அர்ஜுனன் தபசு, கண்ணன் கோவர்த்தன மலையைத் தூக்குதல், மகிஷாசுரமர்த்தினி மண்டபம் ஆகியன இவற்றில் குறிப்பிடத் தகுந்தவை.


 




கடலில் தெரியும் கட்டிடங்கள் 


மார்க்கோபோலோ மற்றும் அவருக்குப்பின் வந்த ஐரோப்பிய வணிகர்கள் இந்த இடத்தை ஏழு ஸ்தூபிகள் என்று அழைத்தனர். அந்த ஏழு ஸ்தூபிகளில் ஒன்று இந்த கடற்கரை கோயில் என்று நம்பப்படுகிறது. இக்கோயிலானது அவர்களது கப்பல்களுக்கு ஒரு கலங்கரை விளக்கம் போல செயல்பட்டிருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


 




 


மீதமுள்ள ஆறு கோவில்கள் மற்றும் கட்டுமானங்களை , கடலுக்குள்ளே பலமுறை பார்த்ததாக மீனவர்களும் சிலர் தெரிவித்து வருகின்றனர். கடல் அரிப்பு மற்றும் கடல் உள்வாங்கும் போது சில கட்டிட அமைப்புகள் மகாபலிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார மீனவ கிராமங்களில் வெளியே தெரியும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்றுள்ளன.


 


 


 


பாதுகாக்கப்பட்ட கடற்கரை கோயில்


கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பு, மாமல்லபுரம் கடற்கரை கோயிலில் கடல் நீர் கோயில் வரை உட்புகுந்து அரிக்க துவங்கியதால், இக்கோயிலின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்ட தொல்பொருள்துறை இக்கோயிலின் தென்புறம் முதல் வடபுறம் வரை கடந்த 1984-ம் ஆண்டில் கடற்கரையில் பாறை கற்கள் குவித்து பாதுகாப்பு அரண் அமைத்து கடல் நீர் உட்புகாமல் இருக்க பாதுகாத்து வருகிறது. இந்நிலையில் கடற்கரை கோயிலின் வடக்கு புறம் பகுதியில் பல்லவர்கள் காலத்தில் பாறைக்குன்றில் வடிவமைக்கப்பட்ட மகிஷாசுரமர்த்தினி குடைவரை புராதன சின்னம் துர்கா சிற்பத்துடன் உள்ளது.


 


 


கடலில் மூழ்கிய குடவரை கோயில் 


இங்கு தங்கள் பாரம்பரிய மாசிமக திருவிழா நடைபெறும் நாள் அன்று கடற்கரையில் , குவியும் பழங்குடி இருளர் மக்கள் கடல் நீரால் சூழப்பட்டு இருக்கும் இந்த மகிஷாசுரமர்த்தினி குடைவரையில் முழங்கால் கடல் நீரில் நீந்தி சென்று அதில் உள்ள துர்கா சிற்பத்திற்கு பூஜை செய்து வணங்குவர். குறிப்பாக மாசிமாதத்தில் இந்த குடை வரை 2 முதல் 3 அடி உயரத்திற்கு கடல் நீரால் சூழப்பட்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் கடற்கரை கோயிலுக்கு கற்கள் குவித்து பாதுகாப்பு தடுப்பு அரண் அமைக்கப்பட்டபோது, இந்த மகிஷாசுரமர்த்தினி குடை வரை சிற்பத்தை சேர்த்து பாதுகாப்பு கற்கள் அமைக்காமல் வெளியே அப்படியே விட்டுவிட்டனர்.  


 




 


 


திடீரென தென்படும் கோயில்


 


அவ்வப்போது கடல் அரிப்பின்போது இந்த குடைவரை சிற்பத்தை சில குறிப்பிட்ட மாதத்திற்கு கடல் சூழ்வதும், பிறகு சில மாதங்களுக்கு கடல் உள்வாங்குவதும், அப்போது மணல் பரப்பில் இந்த குடைவரை கோயில் காட்சி அளிப்பதும் வழக்கமாகும். மேலும் கடலின் உப்புக்காற்றால் அந்த குடைவரை மெல்ல, மெல்ல அரித்து சேதமடைந்து வருகிறது. தற்போது கடலின் தட்ப வெப்ப நிலையை யாராளும் கணிக்க முடியவில்லை எனவும், கடல் எப்போது உள் வாங்குகிறது.எ ப்போது கரைப்பகுதியை நோக்கி முன்னோக்கி வருகிறது என சரியாக கணிக்க முடியவில்லை என இப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.


 




பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை


பல்லவர்கள் காலத்தில் வடிவமைக்கப்பட்டு, முற்றுபெறாத துர்கா சிற்பத்துடன் உள்ள புராதன சின்னமான மகிஷாசுரமர்த்தினி குடைவரை கோவிலின் முக்கியத்துவம், பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இது கடலில் மூழ்கி அழிந்துவிடாமல் நமது பாரம்பரிய வரலாற்று சின்னங்களை பாதுகாக்கும் வகையில், இந்திய தொல்பொருள் துறை நிர்வாகம் கடற்கரை கோயிலை பாதுகாப்பு அரணாக கற்கள் கொட்டி பாதுகாக்கப்படுவதுபோல் மகிஷாசுரமர்த்தினி குடை வரை கோயிலையும், அதனை சுற்றி கற்கள் கொட்டியும், கம்பி வேலி அமைத்தும் அடுத்த தலைமறையினர் இதனை கண்டுகளிக்கும் வகையில் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்களும், சுற்றுலா பயணிகளும், சமூக ஆர்வலர்களும் தொல்பொருள் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.