ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலானது 12 ஜோதிடர் லிங்கங்களில் ஒன்றாகவும், தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்டு பாவங்களை போக்கும் முக்கிய ஸ்தலமாகும். மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை நாளில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.

Continues below advertisement

மேலும், இன்று புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசையையொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து, கோவிலுக்குள் இருக்கும் 22 புனித தீர்த்தத்தில் நீராடி விட்டு ராமநாதசுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் வழிபட்டு வருகிறார்கள். 

வழக்கத்தை விட இன்று அதிக அளவில் பக்தர்களும், பொதுமக்களும் யாத்திரிகர்களும் குவிந்துள்ளனர்.இதனால், ராமேஸ்வரம் நகர் முழுவதும் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது.

Continues below advertisement

இன்றைய தினம் மகாளய அமாவாசை கடைபிடிக்கப்படுவதால், ஏராளமான பக்தர்கள் நேற்று முதலே ராமேஸ்வரத்திற்கு வருகை தந்துள்ளனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்திடும் வகையில் நான்கு ரத வீதிகளிலும் தேவையான  தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டும், திருட்டு போன்ற அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடிய இடங்களை ஒருவழிப்பாதையாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மாதந்தோறும் வரும் அமாவாசை திதி, முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்றது என்றாலும், வருடத்தில் வரும் மூன்று அமாவாசைகள் மிக முக்கியமானவையாகும். தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் மகாளய அமாவாசை ஆகிய மூன்று அமாவாசைகளும் மிகவும் சிறப்பானவையானதாக கருதப்படுகிறது. மகாளய அமாவாசையில் பித்ருக்கள் நம்முடன் தங்கி இருந்து நாம் செய்யும் தர்ப்பணங்களை ஏற்று, நமக்கு ஆசி வழங்கக் கூடிய காலம் என நம்பப்படுகிறது.