தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் பிரசித்தி பெற்ற தசரா திருவிழா இந்த ஆண்டு வரும் 15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. வரும் 25-ம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறும் இவ்விழாவில் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் 24-ம் தேதி நள்ளிரவு நடைபெறுகிறது. இவ்விழாவில் பல லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த விழாவை முன்னிட்டு பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து, வீதி வீதியாக சென்று அம்மனுக்கு காணிக்கை வசூலிப்பார்கள். நிறைவு நாளில் அந்த காணிக்கையை அம்மனுக்கு செலுத்தி வழிபடுவார்கள்.



தசரா வேடப் பொருட்கள் விற்பனை விறுவிறுப்படைந்துள்ளது. குலசேகரன்பட்டினம், உடன்குடி பகுதிகளில் தசரா வேடப்பொருள்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவைகளை பக்தர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர். இதேபோல் திருச்செந்தூர், ஏரல், தூத்துக்குடி பகுதிகளிலும் தசரா வேடப் பொருள்கள் விறுவிறுப்பாக விற்பனையாகி வருகின்றன. மேலும், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் வளாகம், கடற்கரை பகுதி போன்ற இடங்களில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.






இந்நிலையில் தசரா திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எஸ்பி பாலாஜி சரவணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் உள்ளிட்ட அலுவலர்கள் கலந்து கொண்டனர். தசரா விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, பாதுகாப்பு, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் சிறப்பாக செய்யுமாறு அதிகாரிகளுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினர். இந்நிலையில் தசரா விழா ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர் செந்தில் ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது. வருவாய் துறை, இந்து சமய அறநிலையத்துறை, காவல் துறை, பொதுப்பணித்துறை, குடிநீர் வடிகால் வாரியம், மின்வாரியம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் இணைந்து பல்வேறு பணிகளை செய்து வருகின்றன.




இந்த விழாவில் சுமார் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அந்த பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டு சுமார் 250 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு 150 பேருந்துகள் தான் இயக்கப்பட்டன. இந்த ஆண்டு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. குறிப்பாக திருநெல்வேலி, தூத்துக்குடி மார்க்கத்தில் அதிக பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வேக்கு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அவர்களும் இயக்குவதாக உறுதியளித்துள்ளனர். இது தொடர்பாக தென்னக ரயில்வே சார்பில் விரைவில் அறிவிப்பு வரும். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தினமும் 5 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் பந்தல்கள் அமைத்து கேன் தண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.




கடந்த ஆண்டு 150 தற்காலிக கழிப்பறைகள் தான் அமைக்கப்பட்டன. இந்த ஆண்டு 300 தற்காலிக கழிப்பறைகளை 7 இடங்களில் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க 130 பணியாளர்கள் நியமிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்சார தடையின்றி கிடைக்க தனியாக மின் மாற்றி ஒன்று அமைக்கவும், செல்போன் நெட்வொர்க் தடையின்றி கிடைக்க பிஎஸ்என்எல் சார்பில் தற்காலிக டவர் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 10 மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு தினமும் மருத்துவ முகாம் நடத்தப்படும். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வார்கள். கடற்கரை பகுதியில் முள்செடிகள் அகற்றப்பட்டு வாகன நிறுத்தமிடங்கள் அமைக்கப்படவுள்ளது. தற்காலிக பேருந்து நிலையமும் அமைக்கப்படும். காவல் துறை சார்பில் 3000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஒரு சில நாட்களில் செய்து முடிக்கப்பட்டு, கொடியேற்றத்துக்கு முன்பாக அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.