ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலானது 12 ஜோதிடர் லிங்கங்களில் ஒன்றாகவும், தீர்த்தம் மூர்த்தி ஸ்தலம் என முப்பெருமைகளையும் கொண்டு பாவங்களை போக்கும் முக்கிய ஸ்தலமாகும். மாதந்தோறும் வரக்கூடிய அமாவாசை நாளில் தங்களுடைய முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகிறார்கள்.
மேலும், இன்று புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசையை யொட்டி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி, முன்னோருக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து கோயிலுக்குள் இருக்கும் 22 புனித தீர்த்தத்தில் நீராடி விட்டு ராமநாதசுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் வழிபட்டு வருகிறார்கள். இன்று வழக்கத்தை விட அதிகமான பக்தர்களும் பொதுமக்களும் குவிந்துள்ளதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மஹாளய அமாவாசை:
புரட்டாசி மஹாளய அமாவாசையொட்டி காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்த மக்களால், களை கட்டிய ஒகேனக்கல்.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில், மஹாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக பல்வேறு பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள், காவிரி ஆற்றில் புனித நீராடி காவிரி அன்னையை வணங்கி விட்டுச் செல்வது வழக்கம். இன்று புரட்டாசி மாத மஹாளய அமாவாசை தினம் என்பதால், தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம் மாவட்டங்கள் மட்டுமல்லாது அண்டை மாநிலமான கர்நாடக, மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் இன்று காலை முதலே ஒகேனக்கல் வந்தனர்.
இன்று மஹாளய அமாவாசை தினத்தையொட்டி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் காவிரி ஆற்றில் குவிந்தனர். தொடர்ந்து தங்களது முன்னோர்களுக்கு, வாழை இலை பச்சரிசி, தேங்காய், பழம், உணவுப் படையல் வைத்து பூஜை செய்து தர்ப்பணம் கொடுதது காவிரி ஆற்றில் மூழ்கி, குடும்பத்துடன் புனித நீராடினர். இதனையடுத்து ஆற்றங்கரையில் உள்ள காவிரி அம்மன் வணங்கி விட்டு சென்றனர். மேலும் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், ஏராளமானோர் காவிரி ஆற்றில் முனோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க குவிந்தனர். இதனால் கடந்த ஓராண்டுக்கு பிறகு ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மக்கள் கூட்டம் கலை கட்டியது. அதே போல் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரியூர், நெருப்பூர், இருமத்தூர் போன்ற பகுதிகளில் உள்ள ஆற்று கரையோரங்களில் ஏராளமான பொது மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.
திருச்சி:
மிகவும் விஷேசமான மகாளய அம்மாவாசையான இன்று பெரும்பாலானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்பனம் கொடுக்க திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறைக்கு வந்திருந்தனர்.
மேலும் திருச்சி மட்டும் அல்லாமல் கரூர்,பெரம்பலூர் அரியலூர், புதுக்கோட்டை போன்ற பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் ஒன்று கூடி அதிகாலை முதலே தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர்.
தேங்காய் பழங்கள்,பூ அகத்தி கீரை போன்றவற்றை வைத்து தங்களது முன்னோர்களை வழிபட்ட பின்னர் பசு மாட்டிற்கு அகத்தி கீரையை கொடுக்கும் மக்கள் - ஸ்ரீரங்கம் திருவானைக்காவல் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 200க்கும் அதிகமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர்.