அரூரை அடுத்த பிரசித்தி பெற்ற தீர்த்தமலை தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் மாசிமக திருத்தேரோட்டம் வெகுவிமர்சியாக நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

 

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலையில் பிரசித்தி பெற்ற தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலில் ஆண்டுதோறூம் மாசி மாதம், மாசிமக தேர்திருவிழா நடைபெறும். வரலாற்று சிறப்பு மிக்க தீர்த்தமலைதீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் பிப்ரவரி 24-ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து, 5-ம் நாளாக பிப்ரவரி 28-ம்தேதி புதன் கிழமை சுவாமி திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது.

 

இதனையடுத்து மதியம் தீர்த்தகிரீஸ்வரர் திருக்கோயில் தேரோட்டம்  நடைபெற்றது. அருள்மிகு விநாயகர், தீர்த்தகிரீஸ்வரர், தீர்த்தகிரீஸ்வரர் உடனமர் வடிவாம்பிகை திருத்தேர்களை கோவிலை சுற்றி  பக்தர்களை வடம்பிடித்து இழுத்து வந்தனர். முதலில் விநாயகர், இரண்டாவதாக தீர்த்தகிரி ஈஸ்வரர், இறுதியாக வடிவாம்பிகை தேர் ஊர்வலமாக வந்தது. மேலும் தேர் ஊர்வலம் வரும்போது, விழாவில் பங்கேற்ற பக்தர்கள் சுவாமிகளின் திருத்தேர்கள் மீது உப்பு, மிளகு, முத்துக்கொட்டை உள்ளிட்ட நவதானியங்களை இறைத்து வழிபட்டனர். தொடர்ந்து இரண்டாவதாக வந்த தீர்த்தகிரி ஈஸ்வரர் திருத்தேர் ஊர்வலத்தில், தேரின் சக்கரத்தில் ஆடுகளை வைத்து பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன்களை செலுத்தினர்.



 

தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேர்த்திருவிழாவில் பங்கேற்றனர். தேர்திருவிழாவில் அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மேலும் திருவிழாவைக்காண வரும் பொதுமக்களுக்கு அரசு சார்பில் விழாக்கால சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த திருத்தேரோட்டத்தினை பல்லாயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தும், சாமி தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.