மகா சிவராத்திரி தினத்தன்று (18,பிப்ரவரி,2023) மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜெயினி நகரத்தில் கிட்டத்தட்ட 21 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட இருக்கிறது.


மகா சிவராத்திரி தினத்தை கொண்டாடும் விதமாக உஜ்ஜெயினி நகரில் உள்ள மக்கள் தங்களது வீடுகளில் விளக்கு ஏற்றி சிவபெருமானை வழிபட உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் செளகான் (Shivraj Singh Chouhan ) தெரிவித்துள்ளார். மகா சிவராத்திரி விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இது தொடர்பாக குறிப்பிடப்பட்டிருந்தது. 


கடந்த முறை மகா சிவராத்தியன்று 11 லட்சத்து 71 ஆயிரத்து 78 அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது. இம்முறை கின்னஸ் சாதனையில் இடம்பெறும் முயற்சிக்காக கிட்டத்தட்ட 21 லட்சம் விளக்குகள் ஏற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மகா சிவராத்தி உஜ்ஜெயினியில் தீபாவளி போல கொண்டாடப்பட உள்ளதாகவும், மக்கள் தங்களது சிவ பக்தியை அகல் விளக்குகள் ஏற்றி  வெளிப்படுத்த உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


‘ சிவ ஜோதி அர்ப்பணம்’ என்ற தலைப்பின் கீழ் பொதுமக்களும் அரசும் இணைந்து இதை சாத்தியப்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நகரில் உள்ள அனைத்து கோயில்கள், வீடுகள், கடைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் அகல் விளக்குகள் ஏற்றப்பட உள்ளன. சிப்ரா நதி கரையோரம் உள்ள கேதாரேஷ்வரர் கத் கோயிலில் 3 லட்சத்து 10 ஆயிரம் அகல் விளக்குகளும், நரசிங் மந்திரில் 3 லட்சத்து 75 ஆயிரம் விளக்குகளும் மாலி கத் முதல் புக்ஸி மதா கோயிலில் 4 லட்சத்து 75 ஆயிரம் விளக்குகளும் ஏற்றப்பட உள்ளன. கடந்தாண்டு மத்திய பிரதேசத்தை போலவே, அயோத்தி நகரிலும் தீபாவளியின்போது 15 லட்சம் 76 ஆயிரம் விளக்குகள் ஏற்றபப்ட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 


மகாசிவராத்திரி மகிமைகள்:


சிவனின் திருவடி மற்றும் திருமுடி காணப் புறப்பட்ட திருமாலும், பிரம்மனும் தங்களின் முயற்சிகளில் தோல்வி அடைந்து, அவர்களுக்கு பாடம் கற்பிக்க சிவபெருமான் லிங்கோத்பவராகவும், பெரும் ஒளிப்பிழம்பாகவும் தோன்றியது,  கண்ணப்பர் தனது கண்ணினை அளித்து ஈசனிடம் மோட்சம் பெற்றது,  மார்க்கண்டேயருக்காக யமனை ஈசன் தண்டித்தது, - இப்படி நடந்ததெல்லாம் இந்த மகாசிவராத்திரி நாளில்தான் என நம்பப்படுகிறது


மகா சிவராத்திரி விரதம் இருப்பது எப்படி? 


விரத முறைகளை நெறியோடு பின்பற்ற வேண்டும். மகா சிவராத்திரியன்று அதிகாலையில் குளித்துவிட்டு சிவாலயம் சென்று சிவனை தரிக்க வேண்டும். சிவன் கோயிலுக்குச் சென்று விளக்கு போட வேண்டும். பழங்கள், இனிப்புகளை சிவபெருமானுக்கு படையலாக இடலாம். சிவன் சாலிஸம் படிக்க வேண்டும். அன்று காலை முதல் விரதம் இருந்து மாலையில் உலர் பழங்கள், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். கோதுமை பண்டங்களும் உட்கொள்ளலாம். ஆனால் எதிலும் உப்பு இருக்கக்கூடாது. சிவராத்திரி என்பது சிவனின் ராத்திரி. அன்றைய நாள் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சிவராத்திரியன்று இரவில் ஓம் நமசிவாய என ஜெபித்து சிவனை பூஜிப்பவர்கள் மஹாமிருதஞ்சய் மந்திரத்தை உச்சரிப்பவர்கள் எல்லா நோயும் நீங்கி நீண்ட ஆயுள் பெறுவர் என்று சொல்லப்படுகிறது. 


வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் ஒரு சில சிவாலயங்களில் சிவராத்திரியன்று இரவு முழுவதும் சிவபுராண உபன்யாசம் நடைபெறும். அதில் பங்கேற்று சிவனை தியானிக்கலாம். வீடுகளில் பூஜை செய்பவர்கள் வீடுகளிலேயே தேவாரம் திருவாச பாடல்களை படிக்கலாம்.