சென்னையில் உள்ள இந்த 7 கோயில்களை ஒரே நாளில் தரிசித்தால் முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது.


மகா சிவராத்திரி 2025:


நாளை புதன்கிழமை அன்று உலகம் முழுவதும் மகா சிவராத்திரி கொண்டாடப்பட உள்ளது. மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை முழு மனதோடு வழிபட்டால் பல்வேறு நன்மைகள் கிட்டும் என்று சொல்லப்படுகிறது. மகாசிவராத்திரி நாளில் சிவாலயங்களில் இரவில் நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெறும்.


சென்னையில் உள்ள முக்கிய சிவன் கோயில்கள்:


சிவன் கோயில்களில் நடைபெறும் பூஜைகளில் பங்கேற்பது பல நன்மைகளை வழங்கும் என்று நம்பப்படுகிறது. மகா சிவராத்திரி நாளன்று இரவு முழுவதும் கண் விழித்து பூஜை செய்தால், வேண்டியபடி நன்மைகளும் கிடைக்கும் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளன. இதனால் அனைத்து சிவன் கோயில்களிலும், சிவராத்திரி தினத்தன்று சிறப்பு பூஜைகள் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. 


சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள 7 சிவன் கோயில்களில் ஒரே நாளில் தரிசனம் செய்பவர்களுக்கு முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சிறப்பு வாய்ந்த இந்த 7 கோயில்களை, சிவராத்திரி தினத்தன்று தரிசித்தால் நினைத்தது நிறைவேறும் என்பது நம்பிக்கையாக உள்ளது. சென்னையில் இருக்கும் பலருக்கு இந்த கோயில்கள் பற்றி தெரியாமல் இருக்கலாம், இந்த செய்த தொகுப்பில் அது குறித்து காணலாம். 


கபாலீஸ்வரர் கோயில் Kapaleeshwarar Temple


மயிலாப்பூர் என்றாலே கபாலீஸ்வரர் கோயில் தான் நினைவுக்கு வரும். பாடல் பெற்ற தொண்டை நாட்டு கோயில்களில் இந்த கோயிலும் ஒன்றாக உள்ளது. இங்குள்ள சிவனின் பெயர் கபாலீஸ்வரர், அம்மனின் பெயர் கற்பகாம்பாள். பல்லவர்கள் காலத்தில் திருஞானசம்பந்தமூர்த்தி மயிலை கபாலீஸ்வரர் குறித்து பாடல்களை பாடியுள்ளார். 


மயிலாப்பூர் மல்லீசுவரர் கோயில் - Mylapore Karaneeswarar Temple


இக்கோவிலின் மூலவர் பெயர் மல்லீசுவரர். தாயாரின் பெயர் மரகதாம்பிகை. இப்பகுதியில் மல்லிகை மலர் செடிகள் அதிகம் இருந்ததால் இந்த பெயர் பெற்றதாக நம்பப்படுகிறது. மயிலாப்பூர் பஜார் சாலையில், அமைந்துள்ளது. புகழ்பெற்ற பிருகு முனிவர் இந்த கோயிலில் வழிபட்டதாக நம்பப்படுகிறது. இந்த கோயில் உள்ள சிவனை வழிபட்டால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்பட்டு, பிள்ளைகளுக்கு அறிவு வளர்ச்சி அதிகரிக்கும் என நம்பப்படுகிறது. 


மயிலாப்பூர் காரணீஸ்வரர் கோயில்- Mylapore Karaneeswarar Temple


இந்த கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த கோவிலாக பார்க்கப்படுகிறது. காளஹஸ்தி கோயிலில் உள்ள சிவலிங்கம் போல் சதுர வடிவில் காட்சியளிப்பது சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. இங்குள்ள சிவனின் பெயர் காரணீஸ்வரர், அம்மனின் பெயர் சொர்ணாம்பிகை. 


பன்னிரண்டாம் நூற்றாண்டு சேர்ந்த கோயில் ஆக உள்ளது. வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலம் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிருக்கும் அம்மனை வழிபட்டால் வாழ்க்கையில் பொன்னும் பொருளும் திகழும் என்பது நம்பிக்கையாக உள்ளது. பஜார் சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. 


மயிலாப்பூர் வாலீஸ்வரர் கோயில்- Valeeswarar Temple, Mylapore


இங்குள்ள மூலவர் பெயர் வாலீஸ்வரர், அம்மன் பெயர் பெரிய நாயகி அம்மன். இந்தக் கோயிலில் உள்ள பஞ்சலிங்கங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. கௌதம முனிவர் வழிபட்ட கோயிலாக இந்த கோயில் நம்பப்படுகிறது. 


மயிலாப்பூர் விருபாட்சீஸ்வரர் கோயில் - Virupakshiswarar Temple, Mylapore


இங்குள்ள சிவபெருமானின் பெயர் விருபாட்சீஸ்வரர், அம்மனின் பெயர் விசாலாட்சி. சுந்தரமூர்த்தி நாயனார் இங்கு இறைவனை வழிபாடு செய்த போது, இறைவன் நடராஜா தாண்டவத்தை வெளிப்படுத்தியதாக நம்பப்படுகிறது. பைரவர் சன்னதி மற்றும் சூரியனார் சன்னதியும் அமைந்துள்ளது. 


மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் கோயில்- Arulmigu Velleeswarar Thirukovil (Sukran Sthalam)


இக்கோவிலுள்ள மூலவரின் பெயர் வெள்ளீஸ்வரர், தாயாரின் பெயர் காமாட்சி அம்மன். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகிலேயே இந்த கோயில் அமைந்துள்ளது. 


சுக்ராச்சாரியார் கண் பார்வை பரிபானபோது இந்த கோவிலுக்கு வந்து வழிபட்டு கண்பார்வையை திரும்ப பெற்றார் என்பது நம்பிக்கையாக உள்ளது. கண் சம்பந்தமாக பிரச்சனை இருப்பவர்கள் இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால் நோய்கள் நீங்கும் என்பது ஐதீகமாக உள்ளது. 


தீர்த்தபாலீஸ்வரர் கோயில் - Triplicane Tirttapaleeswarar Temple


இக்கோவிலின் மூலவர் மற்றும் அம்பாள் ஆகிய இருவரும் இரண்டு அடி உயரத்தில் மிகச் சிறிய உருவமாக காட்சியளிப்பது சிறப்பாக பார்க்கப்படுகிறது. இக்கோவிலில் பழங்காலத்தில் 64 வகையான தீர்த்தம் குளங்கள் இருந்ததாக நம்பப்படுகிறது.