அனைத்திற்கும் ஆதியான சிவ பெருமானுக்கு மிக மிக உகந்த நாளில் ஒன்று மகாசிவராத்திரி. வருடத்திற்கு ஒரு முறை வரும் மகாசிவராத்திரியன்று சிவ பெருமானை பூஜித்து வழிபட்டால் ஏராளமான நன்மைகளும், பலன்களும் நமக்கு உண்டாகும் என்பது நம்பிக்கை ஆகும்.


மகாசிவராத்திரி:


மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியே மகாசிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. நடப்பாண்டிற்கான மகா சிவராத்திரி வரும் மார்ச் 8ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. மகா சிவராத்திரி இரவு முழுவதும் கண் விழித்து சிவபெருமானை பூஜித்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம் ஆகும்.


மகாசிவராத்திரியன்று சிவ பெருமானக்கு கோயில்களில் நான்கு கால பூஜைகள் நடைபெறும். இதில் முதல் கால பூஜையில் பிரம்மா சிவபெருமானை வழிபடும் காலம் எனவும், இரண்டாம் கால பூஜையில் பார்வதி தேவி சிவ பெருமானை வழிபடும் காலம் எனவும், மூன்றாவது கால பூஜையில் தேவர்கள் சிவ பெருமானை வழிபடும் காலம் எனவும், நான்காம் காலத்தில் மனிதர்கள் உள்பட பிற உயிரினங்கள் சிவ பெருமானை வழிபடும் காலம் எனவும் புராணங்கள் சொல்கிறது.


எப்படி வழிபட வேண்டும்?


இதன் காரணமாகவே, மகா சிவராத்திரியன்று நான்கு காலமும் நான்கு கால பூஜைகள் செய்யப்பட உள்ளது.  சிவராத்திரி தினத்தில் காலையிலே எழுந்து நீராட வேண்டும். பின்பு, வீட்டை முழுவதும் சுத்தம் செய்து பூஜை அறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். சிவன் கோயிலுக்கு சென்று அங்கு நடக்கும் பூஜைகள், வழிபாட்டில் கலந்து கொள்ள வேண்டும். விரதம் இருக்க முடிந்தவர்கள் விரதம் இருக்கலாம்.


சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து சிவ வழிபாடு செய்து அபிஷேகம், ருத்ராபிஷேகம் செய்து சிவ மந்திரங்களை உச்சரித்து சிவனின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும். மகாசிவராத்திரி அன்று சிவாலயங்கள் களைகட்டி காணப்படும்.


சிவாய நாமம்:


சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வதும், வில்வ அர்ச்சனை செய்வதும் மிகச்சிறப்பானதாகும். ஓம் நமசிவாய எனும் சிவாய மந்திரத்தை மனதார உச்சரித்து பூஜிக்க வேண்டும். அதேபோல, ருத்ராபிஷேகம் செய்வதும், கோயில்களில் நடக்கும் ருத்ராபிஷேகத்தில் கலந்து கொள்வதும் மிகவும் சிறப்பானதாகும்.


விரதம் இருந்து மகாசிவராத்திரி தினத்தில் சிவ பெருமானை மனதுருகி வேண்டினால், வேண்டியது நிச்சயம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். சிவராத்திரி தினத்தில் விரதம் இருக்க முடியாதவர்கள், வயது முதிர்ந்தவர்கள், உடல்நலக்குறைவு உண்டானவர்கள் கோயிலுக்கு சென்று மனம் உருகி வழிபட்டாலே போதும்.  மகாசிவராத்திரி தினத்தில் வழிபடுவதால் முந்தைய பிறவிகளில் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்பதும் நம்பிக்கை ஆகும்.


மேலும் படிக்க: Maha Shivaratri 2024: ஓம் நமசிவாய! மகா சிவராத்திரி எப்போது? ஏன் கொண்டாடப்படுகிறது? முழு தகவல்


மேலும் படிக்க: பக்தர்களே! சண்டிகேஸ்வரர் முன்பு கை தட்டி சாமி கும்பிடக்கூடாது! ஏன் தெரியுமா?