”அன்பை வெளிப்படுத்தி, பள்ளிகொண்ட பாற்கடல் வண்ணனாக பெருமாள் திருமோகூரில் காட்சியளிக்கிறார் என்றும் போற்றப்படுகிறது’.

 

திருமோகூர் ஆப்தன்


மதுரை யா.ஒத்தக்கடையில் இருந்து திருவாதவூர் செல்லும் சாலையில் சில கிலோ மீட்டர் தூரத்திலேயே உள்ளது, திருமோகூர். இங்கு சோலைவனம் போன்ற மரங்களுக்கு நடுவே அழகுற அமைந்துள்ளது காளமேகப் பெருமாள் கோயில். 108 திவ்ய தேசங்களில் திருமோகூர் காளமேகப் பெருமாள் 94-வது ஸ்தலமாகும். நம்மாழ்வாரும், திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த திருத்தலமும் கூட. ஒரு கடவுள் என்ற நிலையைத் தாண்டி உற்ற நண்பனாக மாறி நம்முடைய கஷ்டங்களுக்கு செவி சாய்த்து வேண்டியதை அருள்கிறார். இதனால் சாமியை திருமோகூர் ’ஆப்தன்’ என்றும் அழைக்கின்றனர். ஆப்தன் என்றால் நண்பன் என்று பொருள். இப்படி இறைவனே நண்பனாக இறங்கி அருள் பாலிப்பது, சிறப்புமிக்கது.

மோகினி அவதாரம் 


அதே போல் கருமேகம் எப்படி தன்னுள் வைத்துள்ள நீரை மழையாக பொழிகிறதோ, அதைப் போல் இறைவன் தன்னை வேண்டும் நபர்களுக்கு அருள் எனும் அன்பு மழையை பொழிகிறார். இதனால் தான் இறைவன் காளமேகப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இப்படி பல்வேறு வராலாற்றுச் சிறப்பு மிக்க திருமோகூர் தேவர்களுக்கும், புலஸ்திய முனிவர் தவமிருந்து வேண்டிக் கொள்ள பகவான் மோகினி அவதாரத்தில் அருள் பாலித்துள்ளார். அதனாலேயே மோகூர் என்று பெயர் பெற்று பின்னாளில் திருமோகூர் என்று  ஊர் பெயர் பெற்றுள்ளது.

கோயில் தலவரலாறு


உச்சத்திற்கு ஒப்பிடப்படும் அமுதம் கிடைக்க பாற்கடலைக் கடைந்து பங்கு போடுவதில் தேவர்களுக்கும், அசுரர்களுக்கும் இடைய மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் தலையிட தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் உதவியை கேட்டுள்ளனர். அதனை ஏற்ற மகாவிஷ்ணு மோகினி வேடத்தில் வந்துள்ளார். அசுரர்கள் மோகினியை  கண்டதும் அழகில் மயங்கியுள்ளனர். சமயம் பார்த்த தேவர்கள் அமுதத்தை உடனே பகிர்ந்துள்ளனர். இதனால் அமுதத்தின் மூலம் பலம் பெற்ற தேவர்களால் அசுரர்களை அடக்கி வைக்க முடிந்தது.  திருப்பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து ஒரு துளி இங்கு விழுந்தது என்றும், அந்த இடத்தில் தேவர்கள் வெட்டிய குளமே  ஷீராப்தி தீர்த்தம் என்று அழைக்கப்பட்டது என்றும், இதனாலயே பள்ளிகொண்ட பாற்கடல் வண்ணனாக பெருமாள் திருமோகூரில் காட்சியளிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

கோயில் சன்னதிகள்



ஸ்ரீ தேவி, பூதேவி சமேதமாக அருள்பாலிக்கும் காளமேகப்பெருமாளுடன், மோகனவல்லித்தாயார், பள்ளிகொண்ட பெருமாள், ஆண்டாள், கருடாழ்வார், அனுமன், நவநீதகிருஷ்ணனுக்கும் இங்கும் சன்னிதிகள் உள்ளது. கருவறையில் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக உயர்ந்த பீடத்தில் காட்சியளிக்கிறார் காளமேகப் பெருமாள். கருவறையை சுற்றிலும் வில் ஏந்திய ராமன், சீதை, லட்சுமணன், ரதி மன்மதன் சிலைகள் அமையப்பெற்றுள்ளன. அனைத்து கோயில்களிலும் சுவாமியும் அம்பாளும் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்கள். ஆனால், காளமேகப் பெருமாள் கோயிலில் பெருமாள் பெண் வடிவம் எடுத்த தலம் என்பதால், அவருக்கு மரியாதை அளிக்கும் வகையில் இங்கு வீற்றிருக்கும் மோகனவல்லி தாயார் சந்நிதியிலிருந்து வெளியில் வருவதில்லை. திருவிழாக்காலங்களில் சுவாமியுடன் ஆண்டாள் புறப்பாடு நடைபெறும். ஆனால், மோகனவல்லி தாயார் எந்த காலத்திலும் சன்னிதியை தாண்டியதில்லை. அதனால் படிதாண்டா பத்தினி என்று தாயாரை பக்தர்கள் அழைக்கிறார்கள்.







மோட்சம் தரும் பெருமாள்


 

அழகர்மலையில் குடிகொண்டுள்ள கள்ளழகரையும், திருமோகூரில் அருள் பாலிக்கும் காளமேகப் பெருமாளையும் ஒன்றிணைக்கும் விதமாக ’சீராறும் மாலிருஞ்சோலை திருமோகூர்’ என திருமங்கையாழ்வார் பாடியுள்ளார். அதே போல் இறைவனிடம் சரணடைய வேண்டும் என திருவாய்மொழியில் கோயில் தலம் குறித்து நம்மாழ்வார் பாடியுள்ளார். இதனால் இறைவனை இங்கு வேண்டுவதால் மோட்சம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. எனவே  மோட்சம் தரும் பெருமாள் என்ற பெயரும் உண்டு. இதனால் முன்னோர்களுக்கு முக்தி கிடைக்கவும். நம் மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கவும், நாம்முடைய செயல் வெற்றியடை மோட்சம் தரும் பெருமாள் உதவுகிறார் என்று சொல்லப்படுகிறது. எனவே திருமோகூர் பழமையான காளமேகப் பெருமாள் கோயில் கண்டிப்பாக சரிசிக்க வேண்டிய முக்கியமான ஸ்தலமாகும்.