திருச்சி மாவட்டம், வயலூரில் பிரசித்தி பெற்ற முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயில் உருவான வரலாற்றை சுருக்கமாக பார்ப்போம். வயலூர் பகுதியில் காட்டு விலங்குகளை வேட்டையாட சென்ற ஒரு சோழ மன்னர், தாகம் தணிக்க கண்ணில் பட்ட கரும்பு ஒன்றை உடைத்து அதன் சாறினை அருந்த முயன்றார். அப்போது அது மூன்று கிளைகளாக முறிந்து கரும்பில் இருந்து ரத்தம் பீறிட்டது.


இதனால் அதிர்ச்சியடைந்து அந்த இடத்தை தோண்டி பார்த்தபோது சிவலிங்கம் இருந்தது. இதையடுத்து அந்த இடத்திலேயே சிவலிங்கத்துக்கு கோயிலை மன்னர் எழுப்பினார். இந்த கோயிலில் மூலவரான சிவன் ஆதிநாதராகவும், அம்பாள் ஆதிநாதியாகவும் உள்ளனர். இந்த கோயில் வயல் பகுதியில் கட்டப்பட்டதால் வயலூர் ஆனது. கோயிலில் கருவறையின் முதன்மை தெய்வம் சிவன் என்றாலும், முருகன் கோயிலாக புகழ் பெற்று திகழ்ந்து வருகிறது.




வயலூர் முருகன் கோயிலில் திருமணம் செய்தால் நன்மை உண்டாகும்.


வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி அருள்புரிவதால் இந்த கோயிலில் திருமணம் செய்து கொள்வது சிறப்பாகும். இக்கோயிலில் வைகாசி விசாகம், கந்தசஷ்டி பெருவிழா, தைப்பூசம், பங்குணி உத்திரம் போன்ற விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.


இத்தகைய சிறப்பு வாய்ந்த வயலூர் கோயிலில் ஆதிநாதர் சிவன் சன்னதி, ஆதிநாதி பார்வதி அம்பாள் சன்னதி, பொய்யா கணபதி சன்னதி, வள்ளி தெய்வானையுடன் மயில் மீது சுப்பிரமணிய சுவாமி சன்னதி மற்றும் மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த கோயிலுக்கு திருச்சி மட்டுமின்றி வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். முருகன் கோயிலில் மிகவும் சிறப்பாகவும், முக்கிய தலமாகவும் இந்த கோயில் விளங்கி வருகிறது. 


வயலூர் முருகன் கோயிலில் கடைசியாக 2006ம் ஆண்டு ஏப்ரல் மாதம் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகம் நடந்து 17 ஆண்டுகளானதையொட்டி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.




வயலூர் முருகன் கோயில் சீரமைக்கும் பணிகள் 60 சதவீதம் நிறைவு.


இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருப்பணிகள் நடந்து வருகிறது. இதுகுறித்து வயலூர் முருகன் கோயில் அதிகாரிகள் கூறியதாவது: ரூ.5 கோடி மதிப்பீட்டில் கோயில் திருப்பணிகள் நடந்து வருகிறது. கோயில் நுழைவு வாயில் முன் மண்டபம் பழுதடைந்து காணப்பட்டதால் அதை முழுமையாக இடித்து ரூ.2 கோடியில் புதிதாக கட்டும் பணி நடந்து வருகிறது.


ராஜகோபுரம் உள்ளிட்ட கோபுரங்களின் சீரமைப்பு பணியும் நடந்து வருகிறது. தரைதளத்தில் பதித்துள்ள மொசைக் கற்களை பெயர்த்து விட்டு பழைய காலத்தில் இருந்தது போன்று கருங்கற்களால் தளம் அமைப்பதற்கான பணியும், கோயில் மேல்தளம் சீரமைப்பு பணியும் முழுமையாக நடந்து வருகிறது. இந்நிலையில் கோயிலில் அறங்காவலர் குழு அமைக்கப்பட்டு திருப்பணிகள் பார்வையிடப்பட்டு வருகிறது.


மேலும், இப்பணிகள் தற்போது சுமாா் 60 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது. முழுப் பணிகளும் நிறைவுற்று, கோயில் கும்பாபிஷேகம் வரும் செப்டம்பா் மாதத்தில் நடத்த கோயில் நிா்வாகமும், இந்து சமய அறநிலையத்துறையும் உத்தேசித்துள்ளது என கோயில் நிா்வாக அதிகாரிகள் தரப்பில் தகவல் தெரிவிக்கபட்டது.