கம்பூர் புரவி எடுப்பு திருவிழா

 

மதுரை மேலூர் அருகே உள்ளது கம்பூர் கிராமம். பல்வேறு சமூகத்தை சேர்ந்த இப்பகுதி மக்கள் திருவிழாவில் ஒன்றுபட்டு விழா கொண்டாடுகின்றனர். விவசாயத்தை பிரதான தொழிலாக செய்துவரும் இப்பகுதி மக்கள் பெரும்பாலும் அம்மன் மற்றும் அய்யனார் வழிபாட்டில் அதிக ஈடுபாடு கொண்டவராக விளங்கி வருகின்றனர். பொதுவாக இவ்விரு தெய்வங்களும் அனைத்து கிராமங்களிலும் வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படுகின்றன. முத்தப்பிடாரி அம்மன் மற்றும் இளங்காமுடி அய்யனார் என்ற பெயரில் இவ்விரு தெய்வங்கள் கம்பூர்   மக்களால் அழைக்கப்படுகின்றன. இதைத் தவிர கருப்புசாமியும் வழிப்பாடுகளில் முக்கிய இடம்பெறுகின்றன. இக்கிராம சிறு தெய்வங்கள் வைத்து இப்பகுதியில், புரவி எடுப்பு, பங்குனி பொங்கல், கார்த்திகை தீபம், மாசிப்படையல், ஆடி சிறப்பு, ஏறுபூட்டுதல் உள்ளிட்ட விழாக்கள் நடைபெறுகின்றன.



 

பாரம்பரியமாக நடைபெறும் புரவிஎடுப்பு திருவிழா

 

தைமாதம் ஆண்டுதோறும் கம்பூரில் நடைபெறும் புரவியெடுப்பு விழா மிகவும் புகழ் பெற்றதாகவும், ஆடி மாதம் தொடங்கும் இவ்விழா நடைமுறை  தை மாதத்தில் 3 நாள் திருவிழாவில் முடிவுறுகிறது. கடந்த 26,27&28 ஆகிய மூன்று நாட்களாக இவ்வாண்டு விழா நடைபெற்றது. இந்த கொண்டாட்டங்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள்கின்றனர். கம்பூருடன் தேனக்குடிப்பட்டி மற்றும் அய்வத்தான்பட்டி மக்களும் இணைந்து இப்புரவி எடுப்பை கொண்டாடி வருகின்றனர்.



 

பல்லி சொல்லும் அருள் வாக்கு 

 

கடந்த ஆடி மாதம் இளங்காமுடி அய்யனார் கோயிலில் நடந்த ஆடி சிறப்பு அன்று திருவிழாவிற்கு திருவிலம் கேட்கப்பட்டது.  கௌலி(பல்லி) வடிவில் வந்து திருவிழா நடத்த சாமி வாக்கு அருளியது. இதனை தொடர்ந்து புரட்டாசி மாதத்தில் மக்கள் நடைபயணமாக  அழகர்கோவில்  நூபுர கங்கைக்கு சென்று தீர்த்தமாடி வந்தனர். அங்கிருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தத்தை வைத்து காலங்காலமாக புரவிகளை செய்துவரும் வேளார்குடி மக்களிடம் பிடிமண் கொடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கடந்த 3மாத காலமாக கண்மாய் குளங்களில் இருந்து மண்ணெடுத்து அதனை பக்குவப்படுத்தி புரவி  சிலைகளை செய்து வந்தனர். பல்வேறு பணிகளில் வேளார் மக்கள் குடும்பமாக  தொடர்ந்து ஈடுபட்டனர். மக்கள் நேர்த்திக்கடனாக செய்ய கூறிய 120 சாமி சிலையும் மற்றும் 50 புரவிகளும் திருவிழாவிற்கு 20 நாளுக்கு முன்னர்  சூளையில் வைக்கப்பட்டு சுடப்பட்டன.



 

கிராம மக்கள் உற்சாகம்

 

திருவிழா கடந்த 26ந் தேதி தொடங்கியது. நேர்த்திக்கடனாக செய்யப்பட்ட புரவிகளும் சாமிகளும் திருவிழாவில் தயாரான நிலையில் வெள்ளிக்கிழமை மாலை முறையான சடங்குககள் செய்யப்பட்டு  குதிரை பொட்டலில் இருந்து கம்பூர் மந்தை திடலுக்கு  எடுத்துச் செல்லப்பட்டன. முதலில் சாமிகள் ஒன்றன்பின் ஒன்றாக  எடுத்துச் வரப்பட்டுள்ளன. இதில் கம்பூரின் முக்கிய தெய்வங்களாக விளங்கும் அம்மன், அய்யனார், பெரிய கருப்பு, சின்ன கருப்பு, வீரணன், ஈட்டிக்காரன் சாமிசிலையாக வடிக்கப்பட்டு இருந்தன.  சாமி சிலைகளைத் தொடர்ந்து  தொடர்ந்து பிரம்மாண்டமான 50  புரவிகள் ஒன்றன்பின் ஒன்றாக வலம் வந்தன. 



 

ஈட்டிக்காரன் அருள்வாக்கு

 

முதல் அரண்மனை குதிரையை தேனக்குடி பட்டி கிராம மக்களும் இரண்டாவது குதிரையை அய்வத்தான்பட்டி கிராம மக்களும் ஊரோடு திரண்டு வந்து ஆராவார கோசம், ஆட்டம் பாட்டம், மேளதாளத்துடன் தூக்கி  வரும் காட்சி பார்ப்பவரை பரவசப்படுத்துவதாக இருந்தது. இரண்டாவது நாளில் ஈட்டிக்காரன் சாமி அரண்மனை குதிரையில்  பயணித்து மக்களுக்கு அருள் வாக்கு வழங்குவது நடைமுறை. இது திருவலம் கூறுவதல் என அழைக்கப்படுகிறது. அலங்கம்பட்டி சாலையில் உள்ள மாமத்தான் ஊரணிக்கு அருகில் இந்நிகழ்வு நடைபெறுகிறது. மக்கள் அந்த இடத்தில் பல்லாயிரக்கணக்கில் ஈட்டிக்காரன் கூறும் அருள்வாக்கினை கேட்பதற்காக பயபக்தியுடன் கூடுவதும் திருவிழாவில் சிறப்பானது என்கின்றனர் கிராம மக்கள்.