மீனாட்சியம்மன் கோயில் தெப்பத் திருவிழா கோலகலமாக தொடங்கியது. சுவாமியும் அம்மனும் தெப்பத்தில் வலம்வந்து பின்னர் மைய மண்டபத்தில் எழுந்தருளினர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவர் திருக்கோயிலின் தெப்பத்திருவிழா கடந்த ஜனவரி 14-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளைகளிலும் தங்கச்சப்பரம், அன்னம், காமதேனு, சிம்ம வாகனம், குதிரை, ரிஷபம், யாழி, பல்லக்கு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமியும், அம்மனும் எழுந்தருளி மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதனிடையே சிந்தாமணி பகுதியில் கதிரறுப்பு மண்டபத்தில் எழுந்தருளிய பின்னர் கதிரறுப்பு திருவிழா நடைபெற்றது. இதனை தொடர்ந்து தைப்பூத பௌர்ணமி தினமான இன்று தெப்பத்திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
இதனை முன்னிட்டு அதிகாலை மீனாட்சி அம்மன் அவுதா தொட்டில் வாகனத்திலும், சுவாமி வெள்ளி சிம்மாசனத்திலும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி விளக்குத்தூண், கீழவாசல் காமராஜர்சாலை உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்தபடி மீனாட்சியம்மன் கோவிலின் உப கோவிலான மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மரகதவல்லி முக்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தடைந்தனர்.
பின்னர் அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்ட பின்னர் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளினர். இதனையடுத்து அனுப்பானடியை சேர்ந்த இளைஞர்கள் தெப்பத்தேரினை வடம் பிடித்து இழுப்பதற்காக பாரம்பரிய முறைப்படி அழைத்துவரப்பட்டனர். பின்னர் அவர்கள் வடம் பிடித்து இழுக்க தெப்பத்தில் வலம் வந்த சுவாமியையும், அம்மனையும் மதுரை மட்டுமல்லாது அருகில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த பெண்கள், முதியவர்கள், குழந்தைகளும் என ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - PMK Meeting: சூடுபிடிக்கும் நாடாளுமன்ற தேர்தல் - பிப்ரவரி 1ல் பாமக பொதுக்குழு கூட்டம், கூட்டணி முடிவு வெளியாகுமா?