TN Fishermen: தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை சிறைபிடித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கைது செய்யப்பட்ட 6 பேரும் ராமேஸ்வரத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறப்படும் 6 பேரும் காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மீனவர்களின் 2 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 30 மினவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தகக்து.  மீனவர்கள் 6 பேர் சிறைப்பிடிக்கப்பட்ட தகவல் அறிந்த சக மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.


தொடரும் மீனவர் கைது:


புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 12 பேரை கடந்த 13-ம் தேதி இலங்கை கடற்படை கைது செய்தது. அதைதொடர்ந்து,  ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே பாம்பன் தெற்கு துறைமுகத்தில் இருந்து சுமார் 90-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு புறப்பட்டனர். நடுக்கடலில் தலைமன்னாருக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே தாழ்வுபாடு கடற்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தவர்களை இலங்கை கடற்படையினர் நடுக்கடலில் வழிமறித்தனர்.


பின்பு எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 2 விசைப்படகையும், அதில் இருந்த மீனவர்கள் விஜயகுமார், ஆரோக்கியம், யோகம், பிச்சை, இன்னாசி, ஸ்வீடன் உள்ளிட்ட 18 பேரையும் கடந்த 16ம் தேதி கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய 2 டோலர் படகுகளும் கடற்படையினரால் தாழ்வுபாடு கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன. கடந்த இரண்டு வாரங்களில் புதுக்கோட்டை, நாகை, ராமநாதபுரம் உள்ளிட்ட 3 மாவட்டங்களைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டடுள்ளனர்.


முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:


இதுதொடர்பாக கடந்த வாரம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், “ எத்தனை முறை இலங்கையிடம் முறையிட்டும், அந்நாட்டு கடற்படையினரின் சிறைபிடிப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் ஏற்பட்டதாக தெரியவில்லை. இதுபோன்ற தன்னிச்சையான கைது நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த, ஒன்றிய அரசு இலங்கை அரசுக்கு வலியுறுத்த வேண்டும். இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக மீனவர்களின் அனைத்து படகுகளையும் விடுவிக்க உரிய காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட அனைத்து மீனவர்களையும், அவர்களின் மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க ஏதுவாக இலங்கை அரசுக்கு இந்த விவகாரத்தை வலுவாக வெளியுறவுத் துறை அமைச்சகம் எடுத்துச் செல்ல வேண்டும்” என வலியுறுத்தி இருந்தார்.