மதுரை மாவட்டம் அழகர்கோயிலில் உள்ள கள்ளழகர் கோயில் வளாகத்தில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஆடிமாதம் நடைபெறும் ஆடிப்பிரம்மோற்சவ பெருந்திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஆடி திருவிழாவை காண பொதுமக்கள் பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டி கட்டி வருவது சிறப்பாக இருக்கும். 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கக்கூடிய அழகர்கோயிலில், இந்தாண்டும் ஆடிப்பெருந் திருவிழாவை வெகு சிறப்பாக கொண்டாட கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளனர்.
கருப்பணசாமி கதவுகளுக்கு ஆண்டுதோறும் ஆடி பௌர்ணமி அன்று கதவுகள் திறக்கப்பட்டு படிபூஜைகள் நடத்தப்படும். அதேபோல ஆடி அமாவாசை நாளில் கதவுகளுக்கு மட்டும் சந்தனகாப்பு நடத்தி அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுவது வழக்கம். கருப்பண சாமியின் முக்கிய ஆயுதமான அரிவாளை காணிக்கையாக பக்தர்கள் தொன்று தொட்டு வழங்கி வருகிறார்கள். இந்நிலையில் பக்கதர்கள் 18 அடி நீளமுள்ள அரிவளை வழங்கினர்.
அழகர் மலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் கள்ளழகர் திருக்கோயிலின் நுழைவு வாயிலில் பதினெட்டாம்படி கருப்பணசாமி கோயில் அமைந்துள்ளது. சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றிலே கள்ளழகர் வேடம் தரித்து தங்கக் குதிரையில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் ஒவ்வொரு முறையும் மதுரையை நோக்கி
புறப்படும்போது 18-ஆம் படி கருப்பணசாமியிடம் உத்தரவு வாங்கிய பிறகு மதுரையை
நோக்கி புறப்படுவது ஐதீகம். இப்படி துடியான காவல் தெய்வமாக இருக்கும் கருப்பணசாமிக்கு தங்களது வேண்டுதலை நிறைவேற்றும் வண்ணம் தங்களால் இயன்ற அளவு ஒரு அடி முதல் 18 அடி வரை அரிவாள் சாத்துவது வழக்கம். இந்த நிலையில் தை மாதம் முகூர்த்த தினமான நேற்று ஞாயிற்றுக்கிழமை
ஏராளமான சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் பொதுமக்களும் கோயிலுக்கு வந்திருந்தனர்.
அதில் பக்தர் ஒருவர் தனது வேண்டுதலை நிறைவேற்றிட பதினெட்டாம்படி கருப்பணசாமிக்கு
நன்றியை செலுத்தும் வண்ணம் 18 அடி உயர அரிவாளை பேருந்து நிலைய வளாகத்தில் இருந்து தனது நண்பர்கள் குடும்பத்தினருடன் மேளதாளங்கள் முழங்க ஆட்டம் ஆடி ஆனந்தத்துடன் வந்து 18-ம்
படி கருப்பணசாமி கோயிலில் அரிவாளை சமர்ப்பித்தனர். பக்தர்களும் பொதுமக்களும் சூழ்ந்து இருக்க 18 அடி நீள அரிவாளோடு சாமி ஆடி பெண்களும், மேளதாளங்கள் முழங்க பக்தர்களும் வருகை
தந்த அந்த காட்சி காண்போருக்கே அருள் வரச் செய்தது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்