நாகை அருகே  சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றான திருக்குவளை ஶ்ரீ தியாகராஜ சுவாமி ஆலய குடமுழுக்கு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

 

நாகை மாவட்டம் திருக்குவளையில் தருமபுர ஆதீனத்திற்கு சொந்தமான  ஶ்ரீ தியாகராஜ சுவாமி ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயமானது சப்த விடங்க ஸ்தலங்களில் ஒன்றாகவும் நவ கோள்களின் தோஷம் நீக்கிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இவ்வாலய கும்பாபிஷேகம் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது.

 



 

கும்பாபிஷக விழா கடந்த 8ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து 5 கால யாக சாலை பூஜைக்கு பிறகு இன்று காலை 6வது கால யாக சாலை பூஜையும், தொடர்ந்து  மகா பூர்ணாஹீதி நடைபெற்றது.பின்னர் சிறப்பு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு கடம்  புறப்பாடாகியது. அப்போது  நாதஸ்வர வித்துவான்கள் மல்லாரி ராகம் வாசிக்க, உட்பிரகாரத்தில் கடம் வலம் வந்தது.அதனைத்தொடர்ந்து 

இராஜகோபுரம், மூலவரான பிரம்மபுரீஸ்வரர் மற்றும்   வண்டமருபூங்குழலாள் அம்பாள், தியாகராஜ சன்னதி, முருகன்  சன்னதி உள்ளிட்ட  கோபுர கலசங்களில் ஒரே நேரத்தில்  புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.



 

அப்போது ஆருரா தியாகேசா என மனமுருகி வழிப்பட்டது. தொடர்ந்து புனித நீர் அங்கிருந்த பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது இதில் காரைக்கால், தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சிவனடியார்களும் சுற்று வட்டார கிராம மக்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். இவ்விழாவில் தருமை ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மகாதேவன்,ஆதிகேசவலு,ஜெயச்சந்திரன்,நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மற்றும் தருமை ஆதீனம் ,வேளாங்குறிச்சி ஆதீனம் , சூரியனார் கோவில் செங்கோல் ஆதீனம், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.