மதுரையின் பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோயிலில், ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா ஏப்ரல் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முக்கிய நிகழ்வாக உலக பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் திருவிழா வரும் மே 5-ஆம் தேதி நடைபெற உள்ளது.  இன்று மே 2-ஆம் தேதியன்று மீனாட்சிக்கும் சுந்தரேசுவரருக்கும் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு திருக்கல்யாண வைபவத்தை காண உள்ளனர். அதற்கான ஏற்பாடு பணிகளை கோயில் நிர்வாகமும் அறநிலையத்துறையும் மேற்கொண்டு வருகின்றனர்.






இந்தநிலையில் ஒவ்வொரு ஆண்டும்  திருக்கல்யாண வைபவத்தின்போது பழமுதிர்ச்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் சார்பில் சேதுபதி மேல் நிலை பள்ளியில் திருக்கல்யாண விருந்து 23 ஆண்டுகளுக்கு மேலாக அளிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில்  இந்த ஆண்டும் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்தசபை டிரஸ்ட் சார்பில்  ஒரு லட்சத்திற்கு அதிகமானோருக்கு மீனாட்சி சுந்தரேசுவரர்  திருக்கல்யாண  விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. 



 

மாப்பிள்ளை அழைப்பிற்காகவும், திருக்கல்யாண நடைபெறும் நாளை காலை முதல் மாலை வரை சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமானோர்க்கு விருந்து அளிக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகளில்  மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் பிரம்மாண்டமான முறையில் சுமார் 7500 கிலோ அரிசி, 6 டன் காய்கறிகள், மற்றும் சமையல் பொருட்கள் பயன்படுத்தி, 300-க்கும் அதிகமான பெண்கள் சமையல் பணிக்கான காய்கறிகளை வெட்டும் பணிக்காக மாத்திரமும், 100க்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்கள், பொதுமக்கள் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த சுமார் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 



 

மேலும் விருந்திருக்கும் வரும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும்   பொருட்டு  பள்ளி மைதானத்தில் பந்தல் அமைக்கப்பட்டு பக்தர்களுக்கு சுய சேவை முறையில் விருந்து பரிமாறப்படுகிறது.  மேலும் சித்திரைப் பெருந்திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் நாளை கோவில் வளாகத்தில் உள்ள மேல - வடக்கு ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மண்டபதில் நடைபெற உள்ளதை தொடர்ந்து மணமேடையில் மலர் அலங்காரம் பணிகள் மும்முறமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பழைய திருக்கல்யாண மண்டபத்திலும் மணமேடை அலங்காரம் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.