தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் முருக பெருமான், வள்ளி-தெய்வானைக்கு வைகாசி விசாகத்தையொட்டி திருக்கல்யாணம் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது.
பிரசித்தி பெற்ற நாகேஸ்வரர் கோயில்
கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற நாகேஸ்வரர் கோயில் உள்ளது. காவிரி தென்கரை தலங்களில் 27வது தலமாக திருநாவுக்கரசு சுவாமிகளால் பாடல்பெற்ற தலமாகும். மேலும் சூரிய பகவான் பூஜித்த, நாகதேஷ பரிகார தலமாக இக்கோயில் விளங்குகிறது. இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். நாகேஸ்வரர் லிங்க வடிவில் உயரமான ஆவுடையாருடன் காட்சி தருகிறார். ஆனால் பாணம் சிறிதாக இருக்கிறது.
ஆதிசேஷன் வணங்கிய தலம்
ஒரு காலத்தில் பூமியை நாகங்களின் தலைவனான ஆதிசேஷன் தாங்கிக்கொண்டிருந்தான். மக்கள் செய்த பாவங்களால் அவனால் பூமியை சுமக்க இயலவில்லை. உடல் சோர்வு ஏற்பட்டது. எனவே திருக்கயிலாயம் சென்று சிவபெருமானை வேண்டினான். உலகை தாங்குவதற்கு உரிய தியை தரும்படி அவரிடம் கேட்டுக்கொண்டான்.
ஆதிசேஷனின் முறையீட்டுக்கு மனம் இரங்கிய சிவபெருமான், எவ்வளவு காலமானாலும் ஒரே ஒரு தலையினால் இந்த உலகை தாங்கும் தியை தருவதாக உறுதியளித்தார். பரிபூரணதி பெற்ற ஆதிசேஷன் பிரளய காலத்தில் அமுத கும்பத்திலிருந்து வில்வம் விழுந்த இடமான கும்பகோணத்தின் ஒரு பகுதிக்கு வந்தான். அங்கு லிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தான். நாகராஜன் பூஜித்ததால் இறைவனுக்கு நாகேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது.
ராகுதோஷ நிவர்த்தி தலம்
இத்தலம் ஒரு ராகு தோஷ நிவர்த்தி தலமாகும். திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நாகேஸ்வரரை வழிபட்டால் ராகு தோஷம் நீங்கப்பெற்று திருமணம் மற்றும் மகப்பேறு கிடைக்கும். இத்தலத்து முருகப்பெருமானை அருணகிரிநாதர் தனது திருப்புகழில் பாடியுள்ளார். இவ்வாலயத்தின் உட்பிரகாரத்தில் ஆறுமுகப் பெருமானின் சந்நிதி உள்ளது. ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு தனது தேவியர் இருவருடன் காட்சி தருகிறார்.
வைகாசி விசாக விழா
இக்கோயிலில் விசேஷ நாட்களில் வெளி மாவட்ட மற்றும் மாநில மக்கள் திரளாக வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 17-ந் தேதி முதல் 6 நாட்கள் வைகாசி விழா நடந்து வந்தது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகத்தையொட்டி திருக்கல்யாண வைபவம் நடப்பது வழக்கம்.
முருகபெருமானுக்கு திருக்கல்யாணம்
முக்கிய விழாவான சிங்க முகம் தீர்த்தம் வாசலில் இருந்து பால்குடம் புறப்பாடு மற்றும் சுப்பிரமணியருக்கு அபிஷேகம் நேற்று முன்தினம் காலை நடந்தது. தொடர்ந்து இரவு நாகேஸ்வரர் கோயிலில் முருக பெருமான் வள்ளி தெய்வானைக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாணத்தை முன்னிட்டு மேள தாளங்கள் முழுங்க சீர்வரிசை வைபோக நிகழ்வு நடந்தது.
அப்போது திரளான கூடியிருந்த பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமி வீதியுலா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.