Kulasai Dasara Festival 2024: தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீஸ்வரர் உடனுைற முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூருக்கு அடுத்தபடியாக இங்குதான் தசரா திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடனாக பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள்.
கோவிலில் இந்த ஆண்டு தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடி பட்டம் ஊர்வலம் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலுக்கு வந்தது. காலை 9.30 மணிக்கு வேத மந்திரங்கள் முழங்க கோவில் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிஷேகம் நடந்தது. இதில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கடலில் நீராடி புனித நீரை சுமந்து கோவிலுக்கு வந்தனர். ஓம் காளி ஜெய் காளி என்று கோஷமிட்டனர். தொடர்ந்து விரதம் இருந்த பக்தர்களின் கைகளில் கோவில் பூசாரி காப்பு கட்டினார். பல்வேறு ஊர்களில் விரதம் இருக்கும் தசரா குழுவினருக்கும் மொத்தமாக காப்புகள் வழங்கப்பட்டது.
12 நாட்கள் நடைபெறும் விழாவில் தினமும் இரவில் அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார். முதல் நாளில் அம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை திருக்கோலத்திலும், 2-ம் நாளில் கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்திலும், 3-ம் நாளில் ரிஷப வாகனத்தில் பார்வதி திருக்கோலத்திலும், 4-ம் நாளில் மயில் வாகனத்தில் பாலசுப்பிரமணியர் திருக்கோலத்திலும்,
5-ம் நாளில் காமதேனு வாகனத்தில் நவநீதகிருஷ்ணர் திருக்கோலத்திலும், 6-ம் நாளில் சிம்ம வாகனத்தில் மகிஷா சூரமர்த்தினி திருக்கோலத்திலும், 7-ம் நாளில் பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், 8-ம் நாளில் கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும், 9-ம் நாளில் அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்திலும் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றார்.
விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 10-ம் திருநாளான 12-ஆம் தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு நடைபெறும். 11-ம் திருநாளான 13-ஆம் தேதி மாலையில் அம்மனுக்கு காப்பு களையப்பட்டவுடன் பக்தர்களும் காப்பு களைந்து விரதத்தை முடிக்கின்றனர். விழாவின் நிறைவு நாளான 14-ஆம் தேதி காலையில் சிறப்பு அபிேஷக ஆராதனைகள், மதியம் சிறப்பு பாலாபிஷேகம், புஷ்ப அலங்காரம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.