சபரிமலை ஐயப்பன் கோவில் 2024-2025ம் ஆண்டிற்கான மண்டல-மகர விளக்கு பூஜைகள் நிறைவடைந்ததை அடுத்து கோவில் நடை சாத்தப்பட்டது. மீண்டும் மாசி மாத பூஜைக்காக பிப்ரவரி 12ஆம் தேதியன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு, வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். தொடர்ந்து 5 நாட்கள் கோவில் திறந்திருக்கும் இந்த சமயத்தில் பக்தர்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவார்கள்.
மகரவிளக்கு மகோற்சவத்தின் முக்கிய நிகழ்வான ஜனவரி 14ம் தேதி மகர சங்கராந்தி அன்று மாலை மகரஜோதி தரிசனம் நடைபெற்றது. இதில் 3 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து மகர மாத பூஜைகள், படி பூஜை ஆகியவை ஜனவரி 19ம் தேதி வரை நடத்தப்பட்டது. ஜனவரி 19ம் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஜனவரி 20ம் தேதியான இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, கிழக்கு மண்டபத்தில் கணபதி ஹோமம் நடத்தப்பட்டு, பூஜைகள் நடத்தப்பட்டது. காலை நடைபெற்ற பூஜையில் பந்தளம் ராஜ பிரதிநிதி திருக்கேத்தநாள் ராஜராஜ வர்மா மட்டும் கலந்து கொண்டார். அவரது தரிசனத்துடன் நடை அடைக்கப்பட்டது. சாமி ஐயப்பனுக்கு மகரஜோதி அன்று அணிவிக்கப்பட்ட திருவாபரணங்கள், திருவாபரண சங்கத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அய்யனை வணங்கி, அனுமதி பெற்று மீண்டும் பந்தள அரண்மனை நோக்கி திருவாரபண பெட்டி ஊர்வலம் புறப்பட்டு சென்றது. ஜனவரி 23ம் தேதி திருவாபரண பெட்டி ஊர்வலம் பந்தள அரண்மனையை சென்றடையும்.
ராஜபிரதிநிதி சோபானம், சாமி ஐயப்பனை தரிசனம் செய்த பிறகு, மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி, ஐயப்பன் சிலைக்கு விபூதி அபிஷேகம் செய்து, ஐயப்பனின் திருமேனி முழுவதும் விபூதியால் மூடப்பட்டு, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டு, கையில் யோக குச்சி அணிவிக்கப்பட்டது. பிறகு ஹரிவராசனம் பாடி முடித்த பிறகு கோவில் நடை அடைக்கப்பட்டது.பதினெட்டாம் படியில் பின்னோக்கி இறங்கி வந்த அரச பிரதிநிதி, தேவசம் போர்டு பிரதிநிதிகள் மற்றும் மேல்சாந்தி முன்னிலையில் சபரிமலை நிர்வாக அதிகாரி பிஜூ வி நாத்திடம் கோவிலின் சாவியை ஒப்படைத்தார். 2025-2025 சபரிமலை மண்டல-மகரவிளக்கு சீசனின் போது இதுவரை இல்லாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
டிசம்பர் 30ம் தேதி துவங்கி, ஜனவரி 17 வரை நடைபெற்ற மகரவிளக்கு உற்சவத்தின் போது மட்டும் 19,00,789 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த ஆண்டு நவம்பர் 15 துவங்கி, ஜனவரி 17ம் தேதி வரையிலான மண்டல-மகரவிளக்கு காலத்தின் போது மட்டும் 51,92,550 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு தகவல் தெரிவித்துள்ளது. இந்த சீசனில் மொத்தமாக 25 லட்சம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு 10 லட்சம் பக்தர்கள் கூடுதலாக சாமி தரிசனம் செய்துள்ளதாகவும், பக்தர்கள் வருகை அதிகரித்திருப்பதன் காரணமாக கோவில் வருமானமும் அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.