மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு ஐயப்பன் கோயில் உள்ள சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ”மதுபானம் மற்றும் போதைப்பொருள் இல்லாத மண்டலமாக” கேரள அரசு அறிவித்தது.
மகரவிளக்கு திருவிழா:
கேரள மாநிலத்தில் சபரிமலை கோயிலில் ஆண்டுதோறும், இரண்டு மாத காலம் மண்டல மகரவிளக்கு திருவிழா கொண்டாடப்படும். இத்திருவிழாவுக்கு வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மலைக்கோயிலுக்கு வருகை புரிவது வழக்கம்.
இத்திருவிழாவானது, நவம்பர் 17 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 15, 2023 அன்று முடிவடைகிறது. இந்நிலையில் சபரிமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ”மதுபானம் மற்றும் போதைப்பொருள் இல்லாத மண்டலமாக” கேரள அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து, இப்பகுதிகளில் மதுபானம் அருந்த மற்றும் விற்பனை செய்ய தடை செய்யப்பட்டுள்ளது.
தடை செய்யப்பட்ட இடங்கள்:
சன்னிதானம் (கோயில் வளாகம்), பம்பா, திரிவேணி, மரக்கூட்டம், சபரி பீடம் மற்றும் ரன்னி தாலுகாவில் உள்ள பெரிநாடு மற்றும் கொல்லமுலா கிராமங்களில் உள்ள பல பகுதிகளில் மதுபானம் மற்றும் போதைப்பொருள் இல்லாத மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆகையால், நவம்பர் 14 முதல் ஜனவரி 22, 2023 வரை இந்த பகுதிகளில் மது, போதைப்பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களின் நுகர்வு மற்றும் விற்பனைக்கு தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை:
இந்த அறிவிப்பு வெளியான நிலையில் சபரிமலை, பம்பா, நிலக்கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளுக்குள் நுழையும் பக்தர்கள், மது உள்ளிட்ட போதை விற்பனையாளர்கள் மற்றும் அனைத்து மக்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது..
இதையடுத்து மது மற்றும் பிற போதைப்பொருட்களை தடை செய்வது குறித்து பல்வேறு இடங்களில், பல மொழிகளில் எச்சரிக்கை பலகைகள் நிறுவப்பட்டுள்ளன.
இதை கண்காணிக்க வகையில் சன்னிதானம், நிலக்கல் மற்றும் பம்பா ஆகிய இடங்களில் தற்காலிக அலுவலகங்களை திறப்பதற்கு அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்த தடையை கடுமையாக அமல்படுத்துவதற்காக காவல்துறை, கலால் மற்றும் வனத்துறை அதிகாரிகளின் சேர்ந்து கூட்டு சோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.