கரூர் தான்தோன்றிமலை சிவசக்தி நகர் ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற நான்காம் ஆண்டு 108 வலம்புரி சங்க அபிஷேக விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றி மலை, சிவசக்தி நகர் பகுதியில் குடிகொண்டு அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ சிவசித்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு ஆலய நான்காம் ஆண்டு விழாவை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு ஆலயத்தில் பிரத்தியேக யாகசாலை அமைக்கப்பட்டு அதன் அருகே 108 வலம்புரி சங்குகள் மற்றும் கலசங்கள் பிரதேச செய்து அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் பல்வேறு வேத மந்திரங்கள் கூறியபடி யாக வேள்வி சிறப்பாக நடைபெற்றது.
பின்னர் கலசத்திற்கும் யாகத்திற்கும் மகா தீபாராதனை காட்டப்பட்ட பிறகு மேல தாளங்கள் முழங்க 108 வலம்புரி சங்குகளை பக்தர்கள் ஆலயம் வலம் வந்த பிறகு மூலவர் ஸ்ரீ சிவசக்தி விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர். அதன் தொடர்ச்சியாக சிவசக்தி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு உண்டான கலச புனித தீர்த்தத்தை ஆலய முக்கிய நிர்வாகிகள் தலையில் சுமந்தவாறு ஆலயம் வலம் வந்தனர்.
தொடர்ச்சியாக தீர்த்த விநாயகர், துர்க்கை அம்மன், விஷ்ணு, பாலமுருகன், தட்சிணாமூர்த்தி, ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ துர்க்கை, ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ ஐயப்பன் மற்றும் நவக்கிரகங்கள் உள்ளிட்ட சுவாமிகளுக்கு புனிதத் தீர்த்தத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக மூலவர் ஸ்ரீ சிவசக்தி விநாயகருக்கு பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசத்தால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலையில் அணிவித்த பிறகு ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரிப் பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
சுவாமிகளுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் தான்தோன்றிமலை சிவசக்தி நகர் அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற நான்காம் ஆண்டு 108 வலம்புரி சங்க அபிஷேக விழாவை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ சிவசக்தி விநாயகர் ஆலய நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.