கரூரில் பெருமாள் சுவாமிக்கு ஒத்த செருப்பு காணிக்கையாக வழங்க ஊர்வலமாக எடுத்து வந்த மக்கள். புரட்டாசி கடைசி சனிக்கிழமை சுவாமி பாதத்தில் வைத்து வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர்.




திண்டுக்கல் மாவட்டம், கருங்கல் பகுதியை சேர்ந்தவர்கள் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர். காலம் காலமாக ஒத்த செருப்பு என்னும் செம்மாளி செய்து கரூர், தாந்தோணிமலை வெங்கட்ரமண பெருமாள் சுவாமிக்கு காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்த வருடமும் சுவாமி தங்கள் கனவில் வந்து இந்த அளவுடைய ஒத்த செருப்பு செய்து காணிக்கையாக செலுத்த வேண்டும் என்று சொன்னதாக கூறினர். அதன் அடிப்படையில் தோல் எடுத்து 70 இன்ச் அளவுடைய ஒத்த பாதம் செய்த மக்கள் சொந்த ஊரிலிருந்து புறப்பட்டு கரூர் வந்தடைந்தனர்.


தாந்தோணிமலையை சுற்றி ஊர்வலமாக சென்ற அவர்கள் தொடர்ந்து, கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய ஊர்களைச் சுற்றிவிட்டு, புரட்டாசி கடைசி சனிக்கிழமை கரூர் மாநகரப் பகுதி வழியாக ஒத்த செருப்பை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக எடுத்து வந்து கல்யாண வெங்கட்ரமண சுவாமி பாதத்தில் சமர்ப்பித்து வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர். ஆண்டுதோறும் நடைபெறும் இந்த வினோத நிகழ்ச்சியை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.