சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் அருள்மிகு கோட்டை மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் சேலம் மாவட்டத்தில் உள்ள 18 பட்டிக்கும் காவல் தெய்வமாக கோட்டை மாரியம்மன் கோவில் திகழ்ந்து வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவில் தமிழக அரசின் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. 


இந்த நிலையில் கோட்டை மாரியம்மன் திருக்கோவில் புதிதாக கருவறை கட்டுவதற்கு பணிகள் தொடங்கி சில நாட்களுக்கு முன்பு கட்டுமான பணி முழுமையாக முடிவடைந்துள்ளது. கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா வருகின்ற அக்டோபர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில் கடந்த எட்டு நாட்களாக கோட்டை மாரியம்மன் கோவில் கருவறையில் பச்சை கிளி ஒன்று அம்மன் மீது அமர்ந்துள்ளது. பல்வேறு சிறப்புகள் மிக்க கோட்டை மாரியம்மன் மீது பச்சைக்கிளி அமர்ந்துள்ளது காண்போரை பரவசத்தில் ஆழ்த்தி வருகின்றது. 



இந்த கிளியானது கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு கோவிலில் உள்ள வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சனிக்கிழமை காலை கருவறையில் உள்ள கோட்டை மாரியம்மன் தலை மேல் அமர்ந்த பச்சைக்கிளி இதுவரை அங்கிருந்து அசையாமல் அம்மன் மீது அமர்ந்தவாறு உள்ளது. இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் தினம் தோறும் வருகை தந்து கிளிக்கு பால், பழங்கள் போன்ற உணவுகளை கொடுத்து வருகின்றனர். மேலும் கோட்டை மாரியம்மன் மீது கிளி அமர்ந்துள்ளது பக்தர்கள் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து செல்கின்றனர்.


இது குறித்து பக்தர்கள் குழுகையில், சேலம் மாவட்டத்தில் குடியிருக்கும் கோட்டை மாரியம்மன் தற்போது கிளி ரூபத்தில் வந்துள்ளார். கோட்டை மாரியம்மன் கோவில் என்பது பல ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில். இங்கு பல்வேறு அதிசயங்களை கோட்டை மாரியம்மன் நிகழ்த்தியுள்ளார். அதே போல தான் தற்போது கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் அம்மன் கிளியாக சேலத்திற்கு வருகை தந்துள்ளார். அம்மனின் மேல் அமர்ந்திருக்கும் பச்சைக் கிளியை பார்க்கும்போது மதுரை மீனாட்சி அம்மன் நேரில் வந்தது போல காட்சியளிக்கிறது. எனவே தினம்தோறும் கோவிலுக்கு வந்து கிளிக்கு கொய்யாப்பழம் சீதாப்பழம் உள்ளிட்ட பழங்களை உணவாக கொடுத்து வருகிறோம். இது மட்டும் இன்றி சேலம் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அம்மன் மீது அமர்ந்துள்ள கிளியை புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியோடு செல்கின்றனர் என்று கூறினார்.



கோட்டை மாரியம்மன் திருக்கோவிலின் அர்ச்சகர் கூறுகையில், கடந்த வாரம் சனிக்கிழமை காலை வழக்கம் போல் கோவிலை திறந்து பார்த்தபோது அம்மன் தலை மீது பச்சைக்கிளி ஒன்று அமர்ந்திருந்தது. அதனைக் கண்டவுடன் மகிழ்ச்சியில் கோவில் நிர்வாகிகள் மற்றும் அர்ச்சகர்களுக்கு தகவல் கொடுத்தேன். அனைவரும் வந்து பார்த்த பிறகு, அம்மனுக்கு அபிஷேகம் செய்ய அருகில் சென்றேன். ஆனால் கிளியானது சிறிதும் பயமின்றி அங்கேயே இருந்தது. தினம்தோறும் அம்மனுக்கு அபிஷேகம் தீபாரதனை காட்டும் போது கூட கிளி அங்கேயே அமர்ந்திருந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறது. இதனை காண்பதற்காக சேலம் மாவட்டம் மட்டும் இன்றி பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்று கூறினார்.