கரூர் மாவட்டம் , பரமத்தி ஒன்றியம் , நஞ்சைக்காளகுறிச்சி கிராமத்தில் ராமசாமி என்பவரின் தோட்டத்தில் பழைய சிற்பங்கள் இருப்பதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து , குஜிலியம்பாறையை சேர்ந்த வரலாற்று ஆர்வலரும் ஆசிரியரியருமான த. சிவசங்கர் , ஜெகதினேஷ் , கரூர் சுப்ரமணியன், தரகம்பட்டி சிவநாயனார் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
அப்பகுதியில் கி.பி 950 வரை பல்லவப் பேரரசின் ஆட்சியின் கீழ் இருந்து வந்துள்ளது. பல்லவ மன்னர்கள் பெரும்பாலோனர் தீவிர சைவ பக்தர்களாக இருந்துள்ளனர். அமராவதியின் ஆற்றங்கரையின் இரு புறமும் சிவனுக்கு கோயிலை எழுப்பி அவர்களின் பக்தியை வெளிப்படுத்தினர். கட்டிய கோயில்கள் அனைத்தும் கற்றளிகளாக கட்டினர். அழகான சிற்பங்களையும் செதுக்கினர். இங்கு ஆவுடையுடன் கூடிய லிங்கம் , சண்டிகேஸ்வரர் , நந்தி , ஆகிய சிற்பங்கள் மட்டும் கிடைத்துள்ளது. சண்டிகேஸ்வரர் சிற்பம் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.
தலையில் கிரீட மகுடமும் , இரண்டு காதுகளிலும் மகர குண்டலங்களும் , கழுத்தில் ஆபரணங்களும் , மார்பில் முப்புரி நூலும் காணப்படுகிறது. இந்த சிற்பத்தின் வலது கையில் மழுவோடும் , இடது கையை ஊறு ஹஸ்தத்திலும் வைத்துள்ளார். ஊறு என்பது தொடை என்பதாகும். இந்த சிற்பம் 2.1/2 அடி உயரம் , 1.1/2 அடி அகலத்திலும் , சிவலிங்கம் 4.4 அடி உயரத்திலும் , நந்தி 2.3/4 அழகாய் செதுக்கப்பட்டுள்ளது.
இங்கு ஒரு மிகப்பெரிய சிவன் கோயில் இருந்திருக்கலாம். கால ஓட்டத்தில் கோயில் அழிந்திருக்கலாம். இன்னும் நிறைய சிற்பங்கள் காணாமல் போய் விட்டது. கல்வெட்டுகள் எதுவும் கிடைக்காததால் இக்கோயில் எந்த அரசரின் கால கட்டத்தில் கட்டப்பட்டது என்பதை அறிய முடியவில்லை. ஆனால் சிற்பத்தின் அமைவை வைத்துப் பார்க்கும் பொழுது பல்லவர்களின் சிற்பக்கலை என உறுதியாக சொல்லலாம். மேலும் இப்பகுதியில் ஆய்வு செய்தால் இது போன்ற பல விசயங்கள் இன்னும் வெளிப்படும் எனத் தெரிகிறது.
கரூர் , திருச்சி மற்றும் கோவை மாவட்ட சிவனடியார்கள் சார்பில் திருப்பணி பீடம் கட்டப்பட்டு மூன்று சிற்பங்களும் நிறுவப்பட்டு , பூஜைகள் நடைபெற்றது . மலைக்கோவிலூர் அருகே அரசம்பாளையத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக 7 அடி சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது நஞ்சை காளகுறிச்சி 4.4 அடி சிவன் சிலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.