விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த மயிலம் வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தீபதரிசனம் செய்தனர். கார்த்திகை மாதக் கிருத்திகையையொட்டி மூலவருக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடந்தது. மூலவர் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். கோவில் வளாகத்தில் யாகசாலை பூஜை செய்யப்பட்டது. அதேபோல் கோவில் வளாகத்தில் காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. மூலவரிடம் பூஜை செய்யப்பட்ட கொப்பரை தலையில் சுமந்தபடி கோவில் உட்பிரகாரம் எடுத்து வரப்பட்டு உற்சவமூர்த்தியிடம் பூஜிக்கப்பட்ட பின் பரணி தீபமானது, மகா தீபத்துடன் சேர்க்கப்பட்டு  சங்குகன்னர் மண்டபத்தின் மேல் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.


இந்த மகா தீப ஜோதி ஏற்றப்பட்டதை தொடர்ந்து, கோவில் முன்பு சொக்கப்பனை என்ற பெருஞ்ஜோதி தரிசனம் செய்யப்பட்டது. பக்தர்கள் மயிலம் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டபடி சுவாமி தரிசனம் செய்தனர். உற்சவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு  கோவில் உட்பிரகாரம் வலம் வந்தார். அப்போது பக்தர்கள் அரோகரா, கந்தனுக்கு அரோகரா, மயிலம் முருகனுக்கு அரோகரா என பக்தி கோஷங்களை எழுப்பியபடி வலம் வந்தனர். தீபத்திருவிழா வையொட்டி விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.


விழுப்புரம்: பெருமுக்கல் சஞ்சீவி மலைமேல் அமைந்துள்ள ஸ்ரீமுக்தியாஜல ஈஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு 1008 லிட்டர் நெய் தீபம் ஏற்றப்பட்டது.


 




விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த பெருமுக்கல் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீமுத்தியாஜல ஈஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டிவனம் - மரக்காணம் சாலை, பெருமுக்கல் கிராமத்தில் சஞ்சீவி மலைமேல் பிரசித்தி பெற்ற ஸ்ரீமுக்தியாஜல ஈஸ்வரன் கோயில் அமைந்துள்ளது.  இக்கோயிலில், ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி நெய் தீபம் ஏற்றப்படுவது வழக்கம். கார்த்திகை தீப பெருவிழாவை முன்னிட்டு, மாலை 5 மணிக்கு, முக்தியாஜல ஈஸ்வரருக்கு பால், பன்னீர், தயிர், மோர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 21 வகையான வாசனை பொருட்களால் அபிஷேகம் நடந்தது. இதன் தொடர்ச்சியாக முக்தியாஜல ஈஸ்வரர் விபூதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின், நந்தியின் முன்பு பரணி தீபம் ஏற்றப்பட்டது. 




மாலை 6 மணிக்கு, சிவன் பாடல்கள் முழங்க, 1008 லிட்டர் நெய் கொண்டு 7 அடி உயர கொப்பரையில் கார்த்திகை மகா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. இந்த மகாதீபத்தை காண ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கனக்காண பொது மக்கள் மலைமீது ஏறி சாமி தரிசனம் செய்வது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பெருமுக்கல் கிராம பொதுமக்கள், மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர். அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வகையில் பிரம்மதேசம் காவல் நிலைய போலீசார் 30 க்கும் மேற்பட்டோர் பதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.