திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம்  நாளை மாலை நடைபெறுகிறது.  சூரசம்ஹாரம் வெகுவிமர்சையாக நாளை நடைபெற உள்ளது. சூரசம்ஹார நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் சுமார் தமிழ்நாடு காவல்துறை சார்பில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


சூரபத்மனை தனது வேல் மூலம் முருகப்பெருமான் வதம் செய்த நிகழ்வு சூரசம்ஹாரம் என்று அழைக்கப்படுகிறது. திருசெந்தூரை தொடர்ந்து பழனி உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள முக்கிய முருகன் கோயில்களிலும் நாளை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது. 


சூரசம்ஹாரம்:


முருகப்பெருமானின் பல ஆலயங்களில் சூரசம்ஹாரம் நடந்தாலும், புராண கதைப்படி திருச்செந்தூரே யுத்தம் நிகழ்ந்த இடம். இதனால் ஜெயந்திபுரம் என்று திருச்சொந்தூர் ஆலயம் அழைக்கப்படுகிறது.


கந்த சஷ்டியை முன்னிட்டு ஐப்பசி அமாவாசைக்கு மறுநாள் பிரதமை தொடங்கி சஷ்டி வரை 6 நாட்கள் பக்தர்கள் கடும் விரதம் இருந்து முருகனை வழிபடுவார்கள். அறுபடை வீடுகளிலும் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த  13ஆம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து தினமும் சிறப்பு பூஜைகள், சுவாமி எழுந்தருளல் ஆகியவை நடந்து வருகின்றன. ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.


சூரசம்ஹாரத்தை காண தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் திருச்செந்தூருக்கு வரத்தொடங்கியுள்ளனர். வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் திருச்செந்தூருக்கு வந்துகொண்டு உள்ளனர். கோவில் வளாகங்களில் அலைகடலென பக்தர்கள் குவிந்துள்ளனர். கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை  நடைபெறுகிறது. அதன்பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோஷ மண்டபத்தில் எழுந்தருளி தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி, அம்மன் சேர்ந்த கிரி பிரகாரம் சுற்றி கோயிலை சேருகின்றனர். அங்கு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயாபிஷேகம் நடக்கிறது. சூரசம்ஹார விழா முடிந்ததும் விரதமிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விரதத்தை நிறைவு செய்வர். அதேபோல் 19ம்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.


சிறப்பு ரயில்கள்


திருச்செந்தூரில் நடைபெறும் கந்த சஷ்டி விழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவது வழக்கம். எனவே பயணிகளின் வசதிக்காக சென்னை - திருநெல்வேலி மற்றும் திருச்செந்தூர் - தாம்பரம் இடையே சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி சென்னை - திருநெல்வேலி சிறப்பு ரயில் (06001) சென்னை எழும்பூரில் இருந்து நவம்பர் 17 இன்று இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு மறு நாள் மதியம் 12.45 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.


மறு மார்க்கத்தில் திருச்செந்தூர் - தாம்பரம் சிறப்பு ரயில் (06002) திருச்செந்தூரில் இருந்து இரவு 10.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில்கள் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். திருச்செந்தூர் - தாம்பரம் சிறப்பு ரயில் கூடுதலாக ஆறுமுகநேரி, நாசரேத், ஸ்ரீவைகுண்டம், செய்துங்கநல்லூர் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாத மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு பொதுப்பட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும் என ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.