திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரம் நடைபெற்றது. கடற்கரையில் திரண்டிருந்த லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர்.
முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூரில் ஆண்டு தோறும் நடைபெறும் விழாக்களில் கந்த சஷ்டி விழா முக்கியமானதாகும். சூரபத்மனை, முருக பெருமான் வதம் செய்த இடம் என புராணங்களில் கூறப்பட்டுள்ளதால் இங்கு நடைபெறும் சூரசம்ஹாரம் உலக பிரசித்தி பெற்றதாகும்.
இந்த ஆண்டு கந்த சஷ்டி விழா கடந்த 13-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் காலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம், உதயமார்த்தாண்ட அபிஷேகம், யாகசாலை பூஜை, மூலவருக்கு உச்சிகால பூஜை, ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனை, வெள்ளிச் சப்பரத்தில் ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி, வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு பாடல்களுடன் சண்முகவிலாசம் சேருதல், திருவாவடுதுறை சஷ்டி மண்டபத்தில் ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், தங்க ரதத்தில் கிரி வீதி உலா போன்ற பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் இதர கால வேளை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலை பூஜைகள் தொடங்கின. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால பூஜையும், தொடர்ந்து ஜெயந்திநாதருக்கு யாகசாலையில் தீபாராதனையும் நடைபெற்றது.
பின்னர் வெள்ளிச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர் யாகசாலையில் இருந்து எழுந்தருளி வேல் வகுப்பு, வீரவாள் வகுப்பு முதலிய பாடல்களுடன், மேளவாத்தியங்களுடன் சண்முகவிலாசம் சேர்ந்தார். அங்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
பிற்பகல் 2 மணியளவில் திருவாவடுதுறை ஆதீன சஷ்டி மண்டபத்தில் சுவாமி ஜெயந்திநாதருக்கு அபிஷேகம், அங்காரம் நடைபெற்றது.
தொடர்ந்து மாலை 3.50 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர், சூரபத்மனை வதம் செய்வதற்காக போர்க்கோலம் பூண்டு சஷ்டி மண்டபத்தில் இருந்து புறப்பட்டார். மாலை 4.10 மணியளவில் கடற்கரைக்கு வந்தார். பின்னர் சூரசம்ஹாரம் தொடங்கியது. முதலில், கஜ முகத்துடன் வந்த சூரபத்மன், சுவாமியை ஆணவத்தோடு மூன்று முறை வலம் வந்து போரிட்டான். அவனை, மாலை 4.41 மணிக்கு ஜெயந்திநாதர் வதம் செய்தார்.
இரண்டாவதாக சிங்க முகத்துடன் வந்த சூரனை 4.58 மணிக்கும், மூன்றாவதாக சுயரூபத்துடனும் போரிட்ட சூரபத்மனை 5.11 மணிக்கும் வதம் செய்தார். பின்னர் மாமரமாக மாறிய சூரனை சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுள் ஆட்கொண்டார் ஜெயந்திநாதர். அப்போது பக்தர்கள் எழுப்பிய வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் விண்ணை பிளக்கச் செய்தது.
சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடியிருந்தனர். கடலா கடல் அலையா என வியக்கும் வண்ணம் கடற்கரை முழுவதும் மனித தலைகளாக காட்சியளித்தன. சூரசம்ஹாரம் முடிந்ததும் பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை நிறைவு செய்தனர். சூரசம்ஹாரம் முடிந்தும் வள்ளி, தெய்வானையுடன் சுவாமி ஜெயந்திநாதர் சந்தோச மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சுவாமிக்கும், அம்பாளுக்கும் அலங்கார தீபாரதனை நடைபெற்றது. சுவாமி பூஞ்சப்பரத்தில் கிரிபிரகாரம் உலா வந்து திருக்கோயில் சேர்ந்தார். இரவு 108 மகாதேவர் சன்னதி முன்பு சாயா அபிஷேகம் நடைபெற்று பக்தர்களுக்கு சஷ்டி பூஜை தகடுகள் கட்டப்பட்டன.
கந்த சஷ்டி விழாவில் 7 ஆம் திருநாளன்று திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் மு.கார்த்திக், அறங்காவலர் குழுத் தலைவர் இரா.அருள்முருகன் மற்றும் அறங்காவலர்கள், திருக்கோயில் அலுவலர்கள் செய்திருந்தனர்.