தஞ்சாவூர்: கோடை விடுமுறையை ஒட்டி தஞ்சாவூர் பெரிய கோயிலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பெரிய கோயில் பகுதி, பழைய கோர்ட் ரோடு, மேம்பாலம் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. 

தஞ்சை பெரியகோவில் கட்டிட கலை, சிற்பக்கலை, ஓவியக் கலை என்று பல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டிருக்கிறது. 216 அடி உயரம் கொண்ட விமான கோபுரம் மற்றும் அதன் கட்டுமான அமைப்புகளை உலக பொறியியல் வல்லுனர்கள் பார்த்து வியக்கிறார்கள். தமிழர்களின் கட்டிட கலைத்திறனுக்கு சான்றாக ஓங்கி உயர்ந்து நிற்கிறது. ஆயிரம் ஆண்டுகளை கடந்து, நம் கண் முன்னே நிற்கும் பிரமாண்டமான தஞ்சை பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் கட்டப்பட்டது.

உலக பாரம்பரிய சின்னமான பெரியகோவிலில் பெருவுடையார், பெரியநாயகிஅம்மன், வராகிஅம்மன், விநாயகர், முருகன், நடராஜர், சண்டிகேஸ்வரர், தட்சிணாமூர்த்தி என பல்வேறு சன்னதிகள் உள்ளன. இக்கோயிலுக்கு தஞ்சாவூர் மட்டுமின்றி பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும்,  இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.

தஞ்சை பெரிய கோயிலில் மற்ற நாட்களை விட விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதன்படி தற்போது பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய கோயிலுக்கு வந்தபடியே இருந்தனர். இதனால் காலை முதல் மாலை வரை பக்தர்கள் வருகை அதிகளவில் காணப்பட்டது. குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து குடும்பத்தோடு சுற்றுலாப்பயணிகள் அதிகளவில் வருகைபுரிந்தனர்.

கார், வேன் போன்ற வாகனங்களில் வந்ததால் வாகனம் நிறுத்துமிடமும் நிரம்பி வழிந்தது. இதனால் சுற்றுலாப்பயணிகள் வந்த கார்கள், வேன்கள் பழைய கோர்ட் ரோடு பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டது. பெரிய கோயிலுக்கு வழக்கத்தைவிட அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்ததால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இதேபோல் தஞ்சை ராஜப்பா பூங்கா, அரண்மனை, சரஸ்வதி மகால் உட்பட இடங்களிலும் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருந்தது.

ராஜப்பா பூங்காவிற்கு குழந்தைகளுடன் வந்த பெற்றோர்கள் நவீன பொழுதுபோக்கு மையத்தினை பார்த்து ரசித்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தஞ்சை பெரியகோவிலுக்கு வந்தனர். இதனால் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

கோயிலுக்கு சென்ற சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் பெரியகோவில் நுழைவு கோபுரம், ராஜராஜன் கோபுரம், மூலவர் கோபுரம், பெரியநந்தி உள்ளிட்டவைகளை பார்த்து ரசித்தனர். மேலும் கோவிலின் கட்டிட கலைகளையும், சிற்பங்களையும் பார்த்து மெய்சிலித்தனர். இவர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து பெருவுடையார், பெரியநாயகி அம்மனை தரிசனம் செய்தனர்.

சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை அதிகம் இருந்ததால் பெரிய கோயில், மேம்பாலம் பகுதி, பழைய கோர்ட் ரோடு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகம் காணப்பட்டது. இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையிலும் பக்தர்கள் அதை பொருட்படுத்தாமல் பெரிய கோயிலில் குவிந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.