திருநெல்வேலி  பேருந்து  சந்திப்பில் இருந்து,அரை கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள,அருள்மிகு பாளையஞ்சாலைக் குமாரசுவாமி திருக்கோவிலில், கந்தசஷ்டி  தொடங்குவதை முன்னிட்டு, காப்பு கட்டும் நிகழ்வு,தொடங்கியது.இதற்காக விநாயகர் சன்னதி முன்பு யாகசாலை நிறுவப்பட்டு,அதில் இருக்கும் கும்பங்களுக்கு, பூஜைகள் நடைபெற்றன.


உற்சவர் ஸ்ரீவள்ளி தேவசேனா சமேத ஆறுமுக நயினாருக்கும், குமரவிடங்கப்பெருமானுக்கும் மற்றும் மூலவரான ஓம் ஸ்ரீ சாலைக்குமார சுவாமிக்கு காப்பு கட்டும் வைபவம்,நடைபெற்றது.


கந்த சஷ்டி திருவிழா ஆறு தினங்கள் நடைபெற உள்ளதால் விழா நாட்களில் கோயில் முன்பு கலையரங்க மேடையில் கந்தபுராணம், தொடர் சொற்பொழிவு, பக்தி மெல்லிசை, திருமுறை விண்ணப்பம் போன்றவை நடைபெற உள்ளது.


இந்த கோவில்,திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள,முருகன் கோவிலுக்கு இணையான கோவில் என்பதால்,அங்கு நடைபெறும் அதே பூஜை முறைகள்,மற்றும் விசேஷங்கள் இங்கும் நடைபெறும். பொதுவாக ஆகமத்தின்படி, முருகன் கோவில்களில் மூலவர் தெற்கு நோக்கி அருள்பாலிப்பாா். இந்த கோவிலில்,மூலவரான ஓம் ஸ்ரீ சாலைக்குமார சுவாமி, கிழக்கு நோக்கி ஆறுமுகத்துடனும், பன்னிரு கைகளுடனும், மயில்மீதமர்ந்து,பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இங்குள்ள கருவறை மூர்த்தியான சாலைக்குமரன்,மயில் மீது அமர்ந்த கோலத்தில் கம்பீரமாகக் காட்சிதருகிறார். இவருக்குச் சந்தன காப்பு செய்வது, விசேஷ வழிபாடாகும். இவருக்குக் காப்பு செய்யப்பட்ட சந்தனங்கள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இத்திருத்தளத்தில் திருமணம் நடைபெற்றால், சகல செல்வங்களும், பெற்று சிறப்பான வாழ்க்கை அமையும் என்பது பக்தர்களின் அனுபவத்தில் கண்ட உண்மை.


காப்பு கட்டும் பைபாவத்துடன் துவங்கியிருக்கும்,கந்த சஷ்டி  சூரசம்ஹார திருவிழா, நவம்பர் நான்காம் தேதியுடன்  நிறைவடைகிறது. இதைத் தொடர்ந்து, இங்கு மட்டுமின்றி,முருகன் கோவில்கள் இருக்கும் எல்லா தலங்களிலும்,விசேஷங்கள்,களை கட்டுகின்றன. பாளையஞ்சாலை குமாரசாமி கோவிலில், சூரசம்ஹாரத்திற்கு முன்பாக, முருகப் பெருமான்,தனது தாய் பார்வதி தேவியிடமிருந்து, வேல் வாங்கும் நிகழ்வு நடைபெறுகிறது.


முருகப்பெருமான் சூரனை சம்ஹாரம் செய்த நிகழ்வு வருகின்ற 30-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. சூரசம்ஹாரத்தில்,மரமாக நின்று. சூரபத்மனை இரண்டாகப் பிளந்து, சேவலாகவும்,மயிலாகவும் மாற்றி, தன்னிடம் வைத்துக் கொண்டு, தங்களை காத்திட்ட, முருகபெருமானின் தெய்வீகத் தன்மையை போற்றி,இந்திரன் தனது மகள் தெய்வயானை,முருகப் பெருமானுக்கு மணமுடித்து வைக்கிறார்.இந்த நிகழ்வு வருகின்ற 31ஆம் தேதி முருகப்பெருமான் தேவயானை திருக்கல்யாணத்துடன் இனிதே நிறைவு பெறும். அதனைத் தொடர்ந்து நான்கு தினங்கள் ஊஞ்சல் திருவிழா நடைபெறுகின்றது. விழா ஏற்பாடுகளை திருக்கோவில் நிா்வாகத்தினா் செய்து வருகின்றனா்.


திருச்செந்தூர் முருகர் கோவிலுக்கு இணையான கோவிலாக பார்க்கப்படும் இந்த கோவிலுக்கு என, நீண்ட நெடிய வரலாறு உள்ளது. அதுவும் திருச்செந்தூர் முருகன் கோவிலை சம்பந்தப்படுத்தியே, இக்கோவிலின் வரலாறு உள்ளது.


ஆறுபடை வீடுகளில் ஒன்றான  திருச்செந்தூர் முருகன் கோவிலில்  முன்பொரு காலத்தில்,அந்த பகுதிக்கு வியாபார செய்யும் பொருட்டு வந்திருந்த டச்சுக்காரர்கள் , கோவிலில் இருந்த சிலையை  களவாடி சென்றனர். அவர்கள் சென்ற கப்பல் நடுக்கடலில்  இருந்தபோது,கடலில் பயங்கர சூறாவளி காற்று வீசியது. பலத்த மழையும் பெய்தது. அதைப்பார்த்து கப்பலில் இருந்தவர்கள், இந்த சூறாவளி காற்று மற்றும் மழைக்கு,கப்பலில் உள்ள முருகன் சிலைதான் காரணம் என்று பயந்து,கப்பலில் இருந்த முருகன் சிலையை கடலுக்குள் தூக்கி போட்டு விட்டனர். பின்னர் புயல் மழை நீங்கிவிடவே, முருகன் அருளை எண்ணி  தாங்கள் செய்த தவற்றை வருந்தி,அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். அக்காலத்தில் வாழ்ந்த  வடமலையப்ப பிள்ளை என்ற  இறை பக்தர், இந்த செய்தியை அறிந்து திருச்செந்தூரில் மீண்டும் முருகன் சிலைகளை வைப்பதற்காக, கருவேலன்குளம் ஸ்தபதிகளை கொண்டு சிலையை செய்வதற்கு ஏற்பாடுகளை செய்தார்.


சிலை செய்து அதை எடுத்துச் செல்லும் வழியில்,இப்போதுள்ள அருள்மிகு சாலைக்குமாரசுவாமி கோவில் இருக்கும் பகுதியில் இரவு தங்கினார்கள். அன்று இரவு பெரும் மழை பெய்தது.மறுநாள் புறப்படும் தருவாயில், சிலைகள் இருந்த வண்டி நகரவி்ல்லை. மறு நாளும் வண்டியை இழுக்க முயற்சித்தும் வண்டி நகரவி்ல்லை. அன்று இரவு தலைமை சிற்பி கனவில் முருகப்பெருமான் தோன்றி,தாமிரபரணி நதியின் ஒரம் உள்ள இப்பகுதியில் தான் எழுந்தருள இருப்பதாகவும், தனக்கு இங்கே ஒரு கோவிலை அமைக்க வேண்டும் கூறி மறைந்தார். இதனிடையில் வடமலையப்ப பிள்ளை,கனவில் தோன்றிய முருகப் பெருமான்,கடலில் தான் இந்த இடத்தில் மூழ்கி இருப்பதாக கூறி  மறைந்தார். வடமலையப்ப பிள்ளையும் ஆட்களுடன் அங்கு சென்று  முருகப்பெருமான் மற்றும் நடராஜர் சிலைகளை மீட்டு எடுத்து, திருச்செந்தூர் முருகன் கோவிலில் வைத்தனர். மேலும்  தனக்கு கனவில் வந்தது போல,சிற்பிக்கும் கனவில் வந்து முருகன்,அங்கேயே தங்கிவிட விரும்பியதை எண்ணிய  இறையடியார், வீரராவகபுரம், சிந்துபூந்துறையில் உள்ள மக்களுடன் ஒன்று சேர்ந்து,தலைமை சிற்பி உதவியுடன் உற்சவர் குமரக் கடவுளை அங்கேயே பிரதிஷ்டை செய்து ஒரு கோவிலை எழுப்பினார்.


மீண்டும் ஒரு சிலையை செய்தனர். நல்லநாளில் கருவறையில் மயில் மீது அமர்ந்துள்ள ஆறுமுருகப்பெருமான் சிலையை பிரதிஷ்டை செய்து விட்டனர். திருந்செந்தூர் ஆலய அமைப்பு போலவே இக்கோவில் கட்டப்பட்டு அங்கு நடைபெறுவது போலவே பூஜைகளும், திருவிழாக்களும் நடத்தப்படுகிறது என்பது விசேஷமாகும்.


மேலும் இந்த கோவிலில் ஐப்பசி மாதம் கந்த சஷ்டி உற்சவம், தைப்பூசம், வைகாசி விசாகம், திருக்கார்த்திகை, சித்திரை வருட பிறப்பு, பங்குனி உத்திரம் ஆகிய வருடாந்திர விழாக்கள் இங்குச் சிறப்பாக நடைபெறும்.


வருகின்ற 30ம் தேதி  சூரசம்ஹாரமும், 31ஆம் தேதி திருக்கல்யாணம் அதனைத் தொடர்ந்து நான்கு தினங்கள் ஊஞ்சல் திருவிழா நடைபெற உள்ளது.